
வெள்ளரி (Cucumber) கிம்ச்சி என்பது கொரியாவில் மக்கள் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய புத்துணர்வு தரும் ஒரு சைட் டிஷ் ஆகும். இது ஃபிரஷ் மற்றும் க்ரிஸ்பியான வெள்ளரிக்காயுடன் கொரியன் சில்லி ஃபிளேக்ஸ், இஞ்சி, பூண்டு சேர்த்து ஸ்பைசியாகவும் அதிக சுவை மற்றும் மணம் தரும் வகையில் கலந்து பதப்படுத்தி, நொதிக்கச்செய்து தயாரிக்கப்படும் ஓர் உணவு. இது குறைந்த கலோரி கொண்ட உணவு. இதிலுள்ள அதிகளவு ப்ரோபயோட்டிக்குகள் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சுவையும் மொறு மொறுப்புத் தன்மையும் கொண்ட வெள்ளரி கிம்ச்சியை எந்த உணவுடனும் சேர்த்து உட் கொள்ளலாம். இதன் செய்முறை எவ்வாறு என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பெர்சியன் வெள்ளரிக்காய் 8
கோஷெர் (Kosher) சால்ட் 150 கிராம்
கொரியன் சில்லி ஃபிளேக்ஸ் 30 கிராம்
பொடிசா நறுக்கிய வெங்காயம் 1
பொடிசா நறுக்கிய க்ரீன் ஆனியன் 4
பொடிசா நறுக்கிய பூண்டு 30 கிராம்
சர்க்கரை 20 கிராம்
ஃபிஷ் சாஸ் 15 கிராம்
வறுத்த எள் விதைகள் 30 கிராம்
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
ஒரு பெரிய கண்ணாடிக் கோப்பையில் வெள்ளரிக் காய்களை நறுக்கிப்போடவும். அதன் மீது கோஷெர் உப்பைத் தூவவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பதினைந்து நிமிடங்கள் வரை ஊறவிடவும். அதன் பின் காய்களை எடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து உலரச் செய்யவும். பிறகு சில்லி ஃபிளேக்ஸ், நறுக்கிய ஆனியன், நறுக்கிய பூண்டு, எள் விதைகள், சர்க்கரை, ஃபிஷ் சாஸ் மற்றும் க்ரீன் ஆனியன் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட்டாக அரைக்கவும்.
மற்றொரு கோப்பையில் உலர்ந்த வெள்ளரிக் காய்களைப் போட்டு அதனுடன் அரைத்தெடுத்த ஸ்பைசி பேஸ்ட்டை சேர்த்துக் கலந்து நன்கு குலுக்கிவிடவும். எல்லா துண்டுகள் மீதும் அந்த பேஸ்ட் நன்கு பரவியதும், ஒரு காற்றுப் புகாத கண்ணாடி ஜாரில் கலவையைப் போட்டு இறுக மூடி தனியாக வைத்துவிடவும். நான்கைந்து நாட்கள் கழித்து எடுத்து உபயோகிக்க வெள்ளரி கிம்ச்சி தயாராகிவிடும்.