
இந்தியாவின் உணவு விடுதிகளிலும், வெளிநாட்டில் வழங்கப்படும் இந்திய உணவுகளிலும் தவறாது இடம் பெறும் உணவு என்றால் தளி அல்லது தாளிதான். அநேகமாக இந்தியா முழுவதும் உணவு தட்டில் பலதரப்பட்ட சுவைகள் கொண்ட உணவை பரிமாறுவது வழக்கமாக உள்ளது.
உண்மையில் தாளி என்பது உணவு அல்ல. தட்டுதான். தாளி என்பதற்கு உணவுத்தட்டு என்றுதான் சொல்ல வேண்டும். கலை, கலாசார, பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளை, சிந்து சமவெளி நாகரிக காலம் தொடங்கியே தளி என்கிற உணவுமுறை பரிமாறப்பட்டு வந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப நாட்களில் தாளிகள் அரசர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. எங்காவது அரசர்கள் விருந்துக்கு வரும்போது தாளிகளிலேயே உணவுகள் பரிமாறப்பட்டிருக்கின்றன. தங்கத் தாளிகள் கூட புழக்கத்தில் இருந்ததாக அறிகிறோம்.
பொதுவாக வட இந்தியாவில் பஞ்சாபி தாளிகள் பிரபலம். அறுசுவைகளும் ஒரு தாளியில் இருக்க வேண்டுமென்பது விதி. இந்தியாவில் பலவகையான தாளிகள் உள்ளன. மாநிலத்துக்கு மாநிலம் அவற்றின் கலாசாரத்திற்கேற்ப சைவ, அசைவ தாளிகள் வழங்கப்படுகின்றன.
கட்டோரி எனப்படும் சிறிய கிண்ணங்களில் வைக்கப்படும் பலவகையான ருசிகள் கொண்ட சைடு டிஷ்களும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடும். பழங்கால தாளிகள் பல பெட்டிகள் கொண்ட எஃகு தட்டுகளாக இருந்திருக்கின்றன. சாதம், பருப்பு, காய்கறிகள், அப்பளம், தயிர் என எல்லாம் இருக்கும். சிறிதளவு சட்னி, அல்லது துவையல், ஊறுகாய் இருக்கும்.
பழம், ஸ்வீட், தாம்பூலம் இருக்கும். ரொட்டியும், சாதமும் தாளியின் மையத்தில் இருக்கும். ரொட்டியிலிருந்து சாப்பிட துவங்க வேண்டும். பல வகையான ரொட்டிகளை கொண்ட தாளிகள் உள்ளன. தென்னிந்தியாவில் சாதம், பருப்பு, நெய், பாயஸம் கொண்ட தாளி பிரபலமாக உள்ளது. நேபாளம், மகாராட்டிரம், ராஜஸ்தான், குஜராத் என பலவகையான தாளிகள் வட இந்தியாவில் உள்ளன.
புதுமையாக ஒவ்வொரு பகுதிக்கும் புதிய வகை டிஷ்கள், பழங்கள் சேர்த்து பரிமாறுகின்றர். உலகம் முழுவதும் விருந்துக்கு ஏற்ற எளிதான பரிமாறல் முறையாக தாளி முறை உள்ளது.