எப்பொழுதும் ஒரே மாதிரியாக ஒரே பாத்திரங்களில் சமைப்பது சற்று அலுப்பினை தரும் விஷயம். ஆதலால் சில குழம்புகளை மண் பாத்திரத்தில் சமைக்கலாம். ரசத்தை ஈய சொம்பில் வைக்கலாம். சில பொரியல் கூட்டு வகைகளை வெண்கலம், கலாய் பூசிய பித்தளை பாத்திரம் போன்றவற்றில் சமைக்கலாம். அரிசி சாதம் போன்றவற்றை குக்கரில் வைக்கலாம். இதனால் ஆரோக்கியம் மேம்படும்.
அப்படி பாத்திரங்களில் மட்டும் சமைத்தால் போதுமா என்ன? இனிய சமையலை ருசி கூட்டும் டிப்ஸ் வேண்டாமா? அதற்கான சில ஐடியா இதோ:
பருப்பு வேகவைக்கும்போது வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் , பூண்டு, பெருங்காயம், சீரகம், மஞ்சள் பொடி சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்து சாம்பார் செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும். இதில் சிறிதளவு எடுத்து சாதத்தில் நெய்விட்டும் சாப்பிடலாம். எளிதில் சீரணமாகும்.
தக்காளி ரசம் போன்றவற்றை செய்யும் பொழுது தக்காளியை மிக்ஸியில் அரைத்து இதர சாமான்களை கலந்து நன்றாக கொதிக்க விட்டு சிறிதளவு வெல்லம் சேர்த்து குழைவான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். நல்ல ருசியாக இருக்கும். செரிப்பதும் இன்னும் எளிதாகும்.
முட்டைகோஸ் பொரியல் செய்யும்பொழுது கடலைப்பருப்பில் ஒரு கைப்பிடி ஊறவைத்து போட்டு செய்தால் முத்து முத்தாக பார்ப்பதற்கு அழகாகவும், சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருக்கும். குறைவான எண்ணெயிலும் தாளித்து விடலாம். தேங்காய் துருவல் சேர்த்தால் ருசியோ ருசி.
டீ தூள் வாங்கி பாட்டிலில் கொட்டி வைக்கும்போதே சிறிதளவு சுக்கு, ஏலக்காய், கிராம்பு, பட்டை போன்றவற்றை பொடித்து போட்டு கலந்து விட்டால் தேநீர் குடிப்பதற்கு கமகமக்கும். மழைக்காலத்திற்கும் சுக்கு நல்லது.
பயத்தம் பருப்பு சுண்டல் செய்யும்போது பருப்பை வாசனை வரும் வரை வறுத்துவிட்டு செய்தால் சுண்டல் உதிர் உதிராக இருக்கும்.
நட்ஸ் வகைகள அவ்வப்பொழுது எடுத்துக் கொண்டால் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும். இதய ஆரோக்கியத்தையும், மன நிலை மாற்றங்களையும், தூக்கப் பிரச்சனைகளையும் போக்கும். ஆதலால் முந்திரி, பாதாம், வால்நட் போன்றவற்றை ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொண்டு திராட்சை, பேரீச்சம்பழம், அத்தி போன்ற பழங்களை கொரகொரப்பாக அரைத்து எல்லா கலவையும் ஒன்றாக கலந்து லட்டுகளாக பிடித்து சாப்பிடலாம்.
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, மற்றும் கீரைகள், வாழைப்பழத்தின் காம்பு இவைகள் அனைத்தும் வாடாமல் இருக்க அவற்றை அலுமினிய ஃபாயில் பேப்பரில் சுற்றி வைக்கலாம்.
பஜ்ஜி செய்யும்பொழுது கத்திரிக்காய் ,உருளைக்கிழங்கு, வாழைக்காய், வெங்காயம், பீர்க்கங்காய் போன்றவற்றை வித்தியாசமான வடிவில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக வட்டம், ஓவல், அரைவட்டம், சதுரம், சுருள் சுருள் என்று நறுக்கி செய்தால் பரிமாறும் பொழுது எல்லோருக்கும் எல்லாவற்றிலும் ஒவ்ஒன்றாக வைத்துக் கொடுக்கலாம்.
வரமிளகாய் உபயோகிக்கும் பொழுது அதன் காம்பு விதைகளை தூக்கி தூர போடாமல் சேர்த்து வைத்திருந்தால் மிளகாய் பொடி அரைக்கும்பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் நார்ச்சத்துள்ள மிளகாய்பொடி கிடைக்கும்.
சாதம், குழம்பு, ரசம், பொரியல் என்று சமைத்து மூடிவைக்கும் பாத்திரங்களின் மூடியில் இருக்கும் வியர்வை தண்ணீரை அதனுள் ஊற்றாதீர்கள். மூடியைத் திறந்து வெளியில் கொட்டிவிட வேண்டும். அப்பொழுது தான் சாதம் போன்றவற்றில் நீர் கோர்த்துக் கொள்ளாமல் உதிர் உதிரியாக இருக்கும். இல்லையேல் சாதத்தின் அடியில் நீர் கோர்த்து சாதம் சீக்கிரம் கெட்டு விட வாய்ப்பு அதிகம்.