சமையலறை டிப்ஸ்!

சமையலறை டிப்ஸ்!

குக்கர் நீண்ட நாள் உழைக்க சில டிப்ஸ்!

ன்றைய காலகட்டத்தில் பிரஷர் குக்கர் இல்லாத சமையல் அறையையே காண முடியாது. அதனால் குக்கரை பராமரிக்கும் வழிமுறைகளைப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் எரிபொருள் சிக்கனமாகிறது, சமையலும் குறைந்த நேரத்தில் முடிகிறது என்பதால் கிராமங்களிலும் குக்கர்தான் உபயோகத்தில் உள்ளது. குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக்கும்.

வழிமுறைகள்: சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட், விசில் போன்றவற்றை தனித்தனியாக கழுவி துடைத்து வைக்க வேண்டும். விசிலில் உள்ள உணவு துணுக்குகளை ப்ரஷ் கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

சிலர் சமைத்த பிறகு குக்கர் மூடியை திறந்த பின்பு கேஸ்கட்டை எடுக்காமல் அப்படியே வைத்துவிடுவார்கள். சிலர் கேஸ்கட்டை இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் சுத்தம் செய்வார்கள். ஆனால், இவ்வாறு செய்வதாலும், சூட்டோடு வைப்பதாலும், ரப்பர் அப்படியே இறுகிப்போய்விடும். இதனால் கேஸ்கட் அதிக நாட்களுக்கு பயன்படாமல் போய்விடும்.

சமையல் முடிந்தவுடனேயே குக்கரின் மூடியைத் திறந்து ரப்பர் கேஸ்கட்டைக் கழற்றி அதை நன்கு சுத்தமாகக் கழுவி நன்கு இழுத்துவிட்டுப் பின்பு உரிய இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் ரப்பர் கேஸ்கட் வாங்கியபோது எப்படி இருந்ததோ அதேபோல் நீண்ட நாட்கள் உழைக்கும். குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணிக்கு மாதம் ஒரு முறை எண்ணெய் விட வேண்டும். அப்போதுதான் துரு பிடிக்காமல் இருக்கும்.

மேலும், குக்கரில் அடிபிடித்து விட்டாலோ, கரை படிந்துவிட்டாலோ ஸ்க்ரப்பர் ப்ரஷ் கொண்டு சுத்தம் செய்யலாம். ஒரு கப் குளிர்ந்த நீரில் சில துளிகள் சோப்பு நீர் விட்டு குக்கரில் ஊற்றி அதை லேசாக சூடாக்கி பின்னர் கழுவினால் தீய்ந்து கரை பிடித்த உணவுகள் எளிதாக வந்து விடும். தற்போது புதிய வகையான காப்பர் பாட்டம், நான்ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். அவற்றை பயன்படுத்தும்போது கேஸ் அடுப்பில் தீயை அதிகமாக வைத்துப் பயன்படுத்தக் கூடாது.

தண்ணீர் அதிகம் இல்லாமல், தீயும் அதிகமாக இருந்தால் பாத்திரம் சீக்கிரம் பழையது போல் ஆகிவிடும். இவ்வகைப் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது அடுப்பில் தீயை குறைத்து சிம்மில் வைத்து சமைக்க வேண்டும்.

வருடத்துக்கு ஒருமுறை குக்கரை அதற்குரிய கடைகளில் கொடுத்து சரி பார்த்துக்கொள்ளவும். கேஸ்கட், விசில், போன்றவை சரியாக இருக்கின்றதா, குக்கரின் மூடி சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். சின்னதாக ஏதாவது பிரச்னை என்றாலும் குக்கர் வெடித்து விடும் அபாயம் உள்ளது எனவே, குக்கரை ஜாக்கிரதையாக பயன்படுத்துங்கள்.

பாத்திரம் கழுவும் தொட்டியை பராமரிப்பதற்கான எளிய வழிகள்:

பெண்கள் தினமும் பெரும்பாலான நேரத்தை செலவிடும் இடம் சமையலறைதான். எனவே, அதை வசதியுடனும், சௌகரியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புவர். சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் தொட்டி எப்போதும் தண்ணீர் படும் இடம் என்பதால், பாசியும் அழுக்கும் படிந்திருக்கும். இதனால், ஒருவித நாற்றமும் கிளம்பும். இதைப் போக்க தொட்டிகளில் கிளீனரை ஊற்றி நன்றாகத் தேய்த்துக் கழுவவும். அதன்பின் ஒரு நாப்தலின் உருண்டையை தொட்டியினுள் போட்டு வைத்தால் கரப்பான் போன்ற பூச்சித் தொல்லையை தவிர்க்க முடியும்.

சோடாக்களை பாத்திரம் கழுவும் தொட்டியில் ஊற்றி தேய்த்தால், தொட்டியில் துரு பிடித்திருந்தால் அவை நீங்கிவிடும். இது தவிர, நீரினால் ஏற்பட்ட கறைகளையும் நீக்கிவிடும். எலுமிச்சைச் சாற்றில் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கலந்து, அந்த பேஸ்ட்டை பாத்திரம் கழுவும் தொட்டியில் தடவி சிறிது நேரம் கழுத்து பிரஷ் கொண்டு தேய்த்தால், தொட்டி புதிது போல் மின்னுவதோடு, துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும். வினிகரை பயன்படுத்தி பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தம் செய்யலாம். வினிகரை பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுற்றி ஊற்றி, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு பிரஷ் கொண்டு தேய்த்தால், தொட்டியில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, தொட்டி புதிதாகக் காணப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com