ரசம் வைப்பது எளிதானது என்றாலும் சிலருக்கு அதன் சுவை அத்தனை எளிதில் சுலபமாக கிடைத்து விடாது. ரசத்தின் ரகசியமே அதில் சேர்க்கப்படும் பொடியில்தான் உள்ளது. மிளகு, சீரகம், நெய், கருவேப்பிலை ஆகியவை ரசத்தின் சுவையையும் மணத்தையும் கூட்டக்கூடியது. இதனை சரியான அளவில் சேர்க்க வீடே மணக்கும் வகையில் ரசம் செய்துவிடலாம்.
தனியா 1/2 கப்
துவரம் பருப்பு 1/4 கப்
காய்ந்த மிளகாய் 6
மிளகு 1/2 கப்
சீரகம் 1/4 கப்
பெருங்காயக் கட்டி சிறிது
வாணலியில் முதலில் தனியா, மிளகாய் இரண்டையும் சேர்த்து வறுக்கவும். பிறகு துவரம் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து பொன் நிறத்தில் வறுத்தெடுக்கவும். கடைசியாக பெருங்காயக் கட்டி இரண்டு துண்டுகள் போட்டு நன்கு மொறுமொறுப்பாகும் வரை வறுத்தெடுத்து சிறிது நேரம் ஆற விடவும். பிறகு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்க ரசப்பொடி தயார். இந்தப் பொடியை மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
ரசமான ரசம்:
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் நீர் விட்டு சிறிது கல்லுப்பு, புளி நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு கப் நீரில் கரைத்து விட்டு, தக்காளி நறுக்கியது 2, மஞ்சள் தூள் அரை ஸ்பூன், வறுத்தரைத்த ரசப்பொடி 2 ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் வெந்த துவரம் பருப்பை அரைக் கரண்டி எடுத்து தேவையான அளவு நீர் விட்டு கரைத்து சேர்க்கவும். நெய்யில் கடுகு, சீரகம், மிளகுப் பொடி அரை ஸ்பூன், கருவேப்பிலை சிறிது சேர்த்து தாளித்துக் கொட்டி மேலாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாற வீட்டிலுள்ள அனைவரின் பாராட்டையும் பெறலாம்.
நாரத்தை இலை ரசம்!
நாரத்தை இலைகள் 10
பச்சை மிளகாய் 4
கொத்தமல்லி சிறிது
மிளகு சீரகத் தூள் 1 ஸ்பூன்
பூண்டு 4 பல்
கறிவேப்பிலை சிறிது
எலுமிச்சம் பழம் 2
உப்பு தேவையானது
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, சீரகம்,
கருவேப்பிலை
நெய் 2 ஸ்பூன்
நாரத்தை இலையின் நடுநரம்பை எடுத்துவிட்டு பச்சை மிளகாய், கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளித்து இதில் பொடித்து வைத்த கலவையை சேர்த்து இரண்டு கிளறு கிளறி நான்கு கப் தண்ணீர் விடவும். கொதிவரும் சமயம் மிளகு தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி எலுமிச்சம்பழச் சாறு பிழிய மிகவும் மணமான ருசியான நாரத்தை இலை ரசம் தயார்.