சுவையான நாண் – பிஸ்ஸா வீட்டிலேயே செய்வோமா?

நாண் – பிஸ்லா
நாண் – பிஸ்லா
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தேவையான பொருட்கள்:

மைதா - 500 கி, ட்ரை ஈஸ்ட் - 1 ஸ்பூன் (அ) 6 கிராம், உப்பு - 1 ஸ்பூன், சீனி - 2 ஸ்பூன், பால் ஆடை - 4 ஸ்பூன், வெண்ணெய் - 1 ஸ்பூன், பேக்கிங்பவுடர் - 1 ஸ்பூன்.

செய்முறை:

அரை தம்ளர் வெது வெதுப்பான வெந்நீரில் ஈஸ்ட்டைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். 150 கிராம் தண்ணீரில் சீனியையும், உப்பையும் கரைத்து இந்தக் கரைசல்களை 15 நிமிடம் வைத்திருக்கவும். பின் மைதாவுடன் வெண்ணெய், பேக்கிங் பவுடர், பால் ஆடை ஆகியவற்றைக் கலந்து அத்துடன் ஈஸ்ட் சீனி கரைசல்களை ஊற்றி கெட்டியாக மாவைப் பிசையும். நன்கு மிருதுவாக ஆகும் வரை பிசைந்து ஒரு ஈரத்துணியில் மாவை வைத்து அதை ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பினருகிலோ அல்லது வெதுவெதுப்பான இடத்திலோ மூன்று மணி நேரம் வைத்துவிடவும். மூன்று மணி நேரம் கழித்து மாவைப் பார்த்தால் பிசையும்போது இருந்ததைக் காட்டிலும் 2 மடங்கு அதிகமாக உப்பிப் போய் இருக்கும், பின்னர் அதைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி முக்கோண வடிவில் சப்பாத்தியாகப் போட்டு தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுத்து நெய் தடவவும் இதுவே நாண். பன்போல் மிருதுவாகவும், பொம்மென்றும் உப்பியிருக்கும். சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com