
வெந்தயக்கீரை நிறைய கிடைக்கும் சீசன் இது. வெந்தயக்கீரையில் விட்டமின் ஏ, சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. கண் பார்வைக்கு நல்லது. நீரிழிவு எதிர்ப்பு பண்பு, குடல் பிரச்னைகளுக்கு, ரத்த கொழுப்பு அளவை குறைப்பது என பல மருத்துவ குணங்கள் நிறைந்தது இக்கீரை.
மேத்தி முத்தியா:
வெந்தயக்கீரை ஒரு கட்டு
கோதுமை மாவு 2 கப்
கடலை மாவு 1/4 கப்
வெள்ளை எள் 2 ஸ்பூன்
காரப்பொடி 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
தனியாத்தூள் 1 ஸ்பூன்
சீரகத்தூள் 2/2 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
சர்க்கரை 2 ஸ்பூன்
கொத்தமல்லி 1/2 கப்
எண்ணெய்
வெந்தயக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இதற்கு தேவையான உப்பை சிறிது சேர்த்து கையால் நன்கு கலக்கி 5 நிமிடம் வைத்திருக்க அதன் கசப்பு குறையும்.
இத்துடன் கோதுமை மாவு, கடலை மாவு மற்றும் வெள்ளை எள், உப்பு, மஞ்சள் தூள், காரப்பொடி, தனியாதூள், சர்க்கரை, கரம் மசாலா, சமையல் எண்ணெய் இரண்டு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கையால் நன்கு பிசிறவும். தேவையான தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். 15 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டவும். இந்த முத்தியாவை நாம் விரும்பும் எந்த வடிவத்திலும் செய்யலாம். வட்ட வடிவம், உருண்டை வடிவம், ஓவல் என நமக்கு விருப்பமான வடிவத்தில் உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, செய்து வைத்துள்ள முத்தியாவை ஐந்தாறாக போட்டு பொரித்தெடுக்கவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிட மிகவும் ருசியான வெந்தய முத்தியா தயார். மேலே முறுமுறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும் இதனை ஏழு எட்டு நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம் கெடாது.
காபி டீ டைமுக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் இது. தக்காளி சாஸுடன் சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.
சிறுதானிய மேத்தி முத்தியா:
கேழ்வரகு மாவு 1/4 கப்
கம்பு மாவு 1/4 கப்
கோதுமை மாவு 1/2 கப்
மிளகாய்த் தூள் 1 ஸ்பூன்
தனியா தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
வெந்தயக்கீரை 1 கப்
வெள்ளை எள் 1 ஸ்பூன்
கோதுமை மாவு, கம்பு, கேழ்வரகு மாவு ஆகியவற்றுடன் உப்பு, கார பொடி, கரம் மசாலா, தனியா தூள், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை ஆகியவற்றை சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். பிசைந்தமாவை இரண்டு பெரிய உருளைகளாக செய்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். வெந்த முத்தியாவை சிறிது ஆறியவுடன் ஒரு இன்ச் அளவிற்கு வட்டத்துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, எள் சேர்த்து கடுகு பொரிந்ததும் நறுக்கிய முத்தியாவை சேர்த்துக் கிளறவும். இரண்டு பக்கமும் பொன் கலரில் வரும்வரை பிரட்டி எடுத்து கடைசியாக பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி கலந்துவிட மிகவும் ருசியான சிறுதானிய மேத்தி முத்தியா தயார்.