கர்நாடகா ஸ்பெஷல் பூரி செய்வதற்கு கோதுமை மாவோ, மைதா மாவோ தேவையில்லை. அரிசி மாவு கொண்டு மிகவும் ருசியான இந்த பூரி செய்யலாம். இதற்கு தொட்டுக்கொள்ள சம்பல் (யாழ்ப்பாண ரெசிபி) தோதாக இருக்கும்.
அரிசி மாவு பூரி:
அரிசி மாவு ஒரு கப்
துருவிய தேங்காய் 1/2 கப்
உப்பு தேவையானது
சீரகம் 1/2 ஸ்பூன்
சர்க்கரை ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது (விருப்பப்பட்டால்)
வறட்டு அரிசி மாவு ஒரு கப் எடுத்துக்கொண்டு அதில் உப்பு, கையால் நன்கு கசக்கிய சீரகம், சர்க்கரை ஒரு ஸ்பூன், மிகவும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிது சேர்த்து நன்கு கிளறி விடவும்.துருவிய தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி நைசாக பொடித்து அதையும் இதில் சேர்க்கவும். இப்பொழுது தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறுதாக விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். 15 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். பிறகு ஒரு வாழை இலையில் சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து கையால் தட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இந்த பூரி எண்ணெய் குடிக்காது. எனவே டயட்டில் இருப்பவர்கள் கூட தாராளமாக இதனை சாப்பிடலாம்.
மிகவும் ருசியான கர்நாடகா ஸ்பெஷல் அரிசி மாவு பூரி தயார். தேங்காயின் சுவையும், சர்க்கரை சேர்த்திருப்பதால் சிறிது இனிப்பும் கலந்து மிகவும் ருசியாக இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள சம்பல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சம்பல் என்பது யாழ்ப்பாணத்து ரெசிபி. நாம் செய்யும் சட்னி ஈரத்தன்மையுடன் இருக்கும் நீர் சேர்த்து செய்வதால். ஆனால் யாழ்ப்பாணத்து மக்கள் நீர் சேர்க்காமல் அரைத்து உதிர் உதிராக செய்யும் சட்னி இது.
சம்பல்:
தேங்காய் அரை கப்
மிளகாய் 6
காஷ்மீர் மிளகாய் 2
(நல்ல கலர் தரும்)
உப்பு தேவையானது
சின்ன வெங்காயம் 6
எலுமிச்சம் பழம் ஒரு மூடி தேங்காய்,
உப்பு, மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை வறுக்க வேண்டாம். அப்படியே பச்சையாக வைத்து நீர் விடாமல் அரைக்கவும். கடைசியில் ஒரு மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்க ருசியான சம்பல் தயார்.