இன்று உடல் பருமன் என்பது பெரும் பிரச்னை; டயட் என்பது அவசிய தேவை! அதற்கு நிறைய, நிறைய ஆலோசனைகள். அவரவருக்கு உகந்ததை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.
கொள்ளும் பார்லியும் டயட் கஞ்சியும் எடை குறைக்க அவசியம் எடுக்க வேண்டிய உணவுகள் என்று அனைவரும் அறிவோம். ஆனால் இவற்றை எப்படி உபயோகிப்பது என்று குழம்புவோம். இதோ செய்முறை வழிகள்.
கொள்ளு - பார்லி கஞ்சி
தேவையான பொருட்கள்:
கொள்ளு ஒரு கப் பார்லி அரை கப், சீரகத்தூள் கால் டீஸ்பூன், மிளகுத்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை:
முதலில் கொள்ளையும் பார்லியும் தனித்தனியாக வறுத்து, மாவாக அரைத்துக்கொள்ளவும். ஒரு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த கஞ்சி மாவை நன்கு காய்ச்சி அத்துடன் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து குடிக்கலாம். கொள்ளு பார்லி கஞ்சியை தினமும் பருகுவதால் உடல் உறுதி பெறும். உடலில் உள்ள கெட்ட நீர் முழுவதும் வெளியேறும். தேவையற்ற ஊளை சதை குறையும். உடல் பலம் பெற்று கட்டுக்கோப்பாக இருக்கும்.
டயட் கஞ்சி
தேவையான பொருட்கள்:
முழு திணை - ஒரு கப், கொள்ளு - ஒரு கப்.
செய்முறை:
முதலில் திணையை வாசம் வரும் வரை வறுக்கவும். கொள்ளை வெடிக்கும் அளவுக்கு வறுக்கவும். (இரண்டையும் மிதமான வெப்பத்தில் வைத்து தனித்தனியாக வறுக்க வேண்டும்.) வறுத்த பொருட்களை நைசாக அரைக்கவும். இதனை காற்று புகாத பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது இரண்டு ஸ்பூன் பவுடருடன் கேரட், கோஸ் போன்ற கையிலுள்ள காய்கறிகள் மற்றும் சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 விசில் விட்டு வேகவைத்தால் சத்துள்ள டயட் கஞ்சி ரெடி. கஞ்சி ஆறிய பின் இதனுடன் தயிர், உப்பு சேர்த்து பயன்படுத்தலாம்.