

மழைக்காலங்களில் சமையலறையில் நாம் சந்திக்கும் ஒரு பிரச்னை என்றால், காலை சமைக்க காய்களை எடுத்தால் சில நேரங்களில் அவற்றை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும். அந்த அவசரத்தில் என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க காய்கறிகளை முறையாக, பாதுகாப்பான முறையில் வைப்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
தக்காளி
தக்காளிதான் மழைக்காலத்தில் அதிகமாக அழுகும் பழம். அதன் விலையும் ராக்கெட் வேகத்தில் உயரும். எனவே தக்காளியை முடிந்த அளவு ஃப்ரிட்ஜில் வைக்காமல், அகலமான கூடை ஒன்றில் காற்றோட்டமாக வைத்திருப்பது நல்லது.
வெங்காயம்
சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை நன்றாக காற்றோட்டமான இடத்தில் பரப்பி வைத்தால் பூஞ்சையும் அழுகலும் தவிர்க்கலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையை சுத்தம் செய்து உருவி வைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.
கொத்தமல்லி / புதினா
கொத்தமல்லி, புதினா போன்ற இலைகள் மழைக்காலங்களில் எளிதில் அழுகிவிடும். எனவே அவற்றை வாங்கி வந்த உடனே நீரில் நன்றாக அலசி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, சிறிது தேங்காய் எண்ணெயில் வதக்கி, பின்னர் மிக்ஸியில் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளலாம். தேவையான போது எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
பச்சை மிளகாய்
பச்சை மிளகாயின் காம்புகளை நீக்கி, ஈரம் படாமல், ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.
பீட்ரூட் / முள்ளங்கி
பீட்ரூட், முள்ளங்கி போன்றவற்றின் மேல் இருக்கும் தண்டு மற்றும் இலைகள் மழைக்காலத்தில் விரைவில் அழுகிவிடும். எனவே அவற்றை நீக்கி, காய்களை மட்டும் ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளலாம்.
காலிஃபிளவர் / பிராக்கோலி
காலிஃபிளவர் மற்றும் பிராக்கோலி போன்றவற்றை பூக்களை மட்டும் நறுக்கி, எடுத்துவைத்து சேமிக்கலாம்.
பச்சைப் பட்டாணி
பச்சைப் பட்டாணிகளை உரித்து, தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்துகொள்ளலாம்.
கீரைகள்
முடிந்தவரை மழைக்காலத்தில் கீரைகளை வாங்குவதைத் தவிர்ப்பது நன்று.
காய்கறி சேமிப்பு பைகள்
காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைப்பதற்கென்றே பிரத்யேகமான காகிதப் பைகள் மற்றும் வலைப் பைகள் ஆன்லைனில் நிறைய கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். மேலும் மழைக்காலம் முடியும் வரை தேவையான அளவு மட்டுமே வாங்கி வைத்துக் கொள்ளலாம்.