தேநீர் என்றாலே அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ஒன்று. சிலருக்கு தேநீர் மட்டும் குடிக்கவில்லை என்றால் அந்த நாளே நன்றாக செல்லாது. மசாலா தேநீரை சூடாக தலைவலிக்கும் உற்சாகத்திற்கும் அருந்துவார்கள். சுவைக்கும் நறுமணத்திற்கும் தேநீருக்கு போட்டி தேநீரே. அந்த வகையில் ஆறு வகையான தேநீர்களை எளிதான முறையில் எப்படி செய்வது என்பதைப் பற்றி பார்ப்போம்.
கேரமல் டீ:
பாத்திரத்தில் இரண்டு கப் பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பால் பொங்கும் சமயத்தில் இரண்டு ஸ்பூன் டீ தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிவிட வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பொன்நிறம் ஆகும்வரை கலக்கிவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். சிறிது நேரத்தில் கேரமல் தயாராகிவிடும். டீத்தூளைக் கொதிக்கவிட்ட பாலில் கேரமல் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் சூடாக எடுத்து பருகினால் அந்த நாளே மிகவும் உற்சாகமாக இருக்கும்.
துளசி டீ:
தொண்டை வலிக்கும் எடை குறைவுக்கும் துளசி தேநீரை குடிக்கலாம். முதலில் துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரில் நன்றாக துளசி இஞ்சிய பின்னர் வடிகட்டவும். ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் எலிமிச்சை சேர்த்து பருகினால் மிகவும் நன்றாக இருக்கும்.
காஷ்மீர் கஹ்வா/ காஷ்மீர் தேநீர்:
பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி, அதில் 6 முதல் 7 ஏலக்காய், 1 லவங்கப்பட்டை, சிறிது குங்குமப்பூ, டீ தூள், 5 முதல் 6 பாதம்(பொடியாக்கிப் பயன்படுத்தவும்), அரை கப் தேன் ஆகியவற்றை நன்றாக கொதிக்கவிட்டு வடிகட்டினால் காஷ்மீர் கஹ்வா ரெடி.
இஞ்சி தேன் டீ:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து இஞ்சி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கிய பின்னர் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இது சளி, இருமலுக்கு மருந்தாக இருக்கும்.
ஹெர்பல் டீ:
ஏலக்காய், பட்டை, கிராம்பு, மல்லி, பெருஞ்சீரகம் ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கட்ட வேண்டும். இதில் நீங்கள் துளசியும் சேர்த்துக்கொள்ளலாம்.
பனைவெல்லம் தேநீர்:
கருப்பு மிளகாய்த்தூள், சீரகம், கொத்தமல்லி விதைகள் மற்றும் இஞ்சி தூள் சேர்த்து கரடுமுரடாக அரைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு பனை வெல்லம் சேர்த்து கரையும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க வைத்தால் கருப்பட்டி தேநீர் ரெடி.
தினமும் ஒரே தேநீர் குடித்து மிகவும் சலித்துப்போயிற்று என்றால் இந்த தேநீர் வகைகளை காலை மற்றும் மாலை சுவைத்தால் உடலுக்கும் மூளைக்கும் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும்.