சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு தற்போது பெருகி வருகிறது. இந்த நிலையில் நம் குழந்தைகளுக்கு சிறுதானியங்களை பழக்குவது அவர்களின் உடல் நலனுக்கு நல்லது. சிறிது சிறிதாக அவர்கள் உணவில் சிறுதானியங்களை புகுத்துவோம்.
மேலும் இரும்புசத்து கொண்ட சிறு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பெண்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை பாதிப்பை தடுக்க உதவும். இதில் உள்ள சத்துக்கள் சர்க்கரைநோய் டைப்-2, இதயப் பிரச்னைகள், கொழுப்பை கட்டுப்படுத்துதல், கால்சியம் பற்றாக்குறையை கட்டுப்படுத்துதல், புற்றுநோயை கட்டுப்படுத்துதல் போன்றவற்றுக்கு நிவாரணம் தருகிறது. சிறுதானியங்கள் மூலம் 15-20% நார்ச்சத்து நமக்கு கிடைக்கிறது. இதனால் மலச்சிக்கல், செரிமான பிரச்னைகளும் நிவர்த்தி ஆக வாய்ப்புண்டு.
இதோ இங்கு குழந்தைகள் விரும்பும் வகையில் குதிரைவாலி கடலை உருண்டை மற்றும் பணிவரகு பாயாசம் ரெசிபிகள்.
குதிரைவாலி கடலை உருண்டை
தேவை:
ஒன்று இரண்டாக உடைத்த குதிரைவாலி ரவை- 1கப்
வேர்க்கடலை- 1/2 கப்
நாட்டுச்சக்கரை அல்லது வெல்லம் - 11/4 கப்
முந்திரி -10
நெய் - சிறிது
செய்முறை:
குதிரைவாலி ரவை மற்றும் வேர்க்கடலையை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையின் தோல்களை எடுத்துவிட்டு ஆறியதும் மிக்ஸியில் இரண்டையும் போட்டு ஒரு சுற்று சுற்றி அதனுடன் பொடித்த வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையை ஒரு சுற்று சுற்றி விட்டு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் நெய்யில் வறுத்த பொடித்த முந்திரி சேர்த்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். இந்த குதிரைவாலி வேர்க்கடலை உருண்டை அருமையான குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான தின்பண்டம்.
பணி வரகு பாயாசம்
தேவை:
பணவரகு- ஒரு கப்
பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 2 கப்
கெட்டி தேங்காய் பால் -1கப்
இரண்டாம் மற்றும் மூன்றாம் தேங்காய் பால் -2 கப்
ஏலக்காய் - 10
நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை - தலா-8
தேங்காய் துண்டுகள் - தேவைக்கு
செய்முறை:
குக்கர் அல்லது அடிகனமான பாத்திரத்தில் சுத்தப்படுத்திய பணிவரகு, பாசிப்பருப்பு இரண்டையும் இரண்டு மற்றும் மூன்றாம் முறை பிழிந்து எடுத்த தேங்காய்ப்பால் உடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். அதனுடன் கொதி நீரில் கரைத்த வெல்லக் கரைசல், பொடித்த ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை மற்றும் சிறிய பற்களாக அரிந்த தேங்காய் துண்டுகள் சேர்த்து கிளறவும். பின் தேங்காய் பால் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
குறிப்பு- முதல் தேங்காய் பால் சேர்த்த பின் அதை கொதிக்க விடக்கூடாது. ருசி கெடும்.