விடுமுறை நாட்களில் பிள்ளைகளுடன் தொலைதூரத்திற்கு சென்று பொழுதை கழிக்க விரும்புவோம். அப்படி செல்லும்போது பசிக்கு குழந்தைகள் கேட்பதை எல்லாம் கடைகளில் வாங்கி தந்தால் வீட்டுக்கு வந்தபின் உடல் நல பாதிப்புகளும் பின்விளைவாக வரும்.
ஏனெனில் பாக்கெட்டில் அடைத்த சிப்ஸ் வகைகள் மற்றும் பாட்டிலில் சேமித்த குளிர்பானங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் செல்லும் வழியில் பசி என்று சொல்லும் குழந்தைகளின் பசி போக்க வீட்டில் இருந்தே நாம் தயாரித்துச் செல்லும் சில எளிய ஸ்னாக்ஸ் வகைகள் இங்கு.
குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக சாப்பிடும் இட்லி, தோசை போன்றவை பிடிப்பதில்லை. ஆனால் குழந்தைகளுக்கு மினியேச்சர் வெர்ஷன்கள் மிகப்பிடிக்கும்.
பழக்கலவை
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த பழங்களை தினந்தோறும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். போதிய ஊட்டசசத்துக்களை பழங்களில் இருந்து தான் பெறுவார்கள். அதனால் வெளியில் போகும்போது அவர்கள் விரும்பும் பழங்களை நறுக்கி அதனுடன் சிறிது தேன் கலந்து தாருங்கள்.
மினி இட்லி
குழந்தைகளுக்கு நார்மலாக இருக்கும் உணவுகளை விட இனிய செலவில் இருக்கும் உணவுகளை விருப்பமாக உண்பார்கள். மினி இட்லிகளை அவர்கள் விரும்பும் வகையில் பொடி கலந்து அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தரலாம். அதேபோல் கோதுமை மாவில் சிறிது நாட்டு சக்கரை ஏலக்காய் கலந்து மினி இட்லிகளாக ஊற்றி ஸ்வீட் இட்லியாக தரலாம்.
நட்ஸ் வகைகள்
சிறந்த ஊட்டச்சத்து தரும் முந்திரி பாதாம் போன்ற நட்ஸ் வகைகள் மற்றும் விதைகளைத் தரலாம். முந்திரி நிலக்கடலை போன்றவற்றை வறுத்து மிளகுத்தூள் கலந்து தரலாம். வெல்லம் கலந்த நிலக்கடலை பொட்டுக்கடலை பர்பி உருண்டை களையும் விரும்புவார்கள்.
பான்கேக்
கேக் வகைகள் என்றால் குழந்தைகளுக்கு விருப்பம். கோதுமை மாவில் முட்டை அடித்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து துளி எசன்ஸ் மற்றும் சோடா உப்பு சேர்த்து வீட்டிலேயே பான் கேக் செய்து எடுத்துப் போகலாம்.
பாப்கார்ன்
உடலுக்கு கேடு தராத ஸ்நாக்ஸ்ல் ஒன்று பாப்கார்ன். இதையும் அதிகமாக உப்பு மற்றும் ஆயில் ஆகியவை சேர்க்கப்பட்டு எப்போதோ பொரித்து கவரில் போட்டு கடைகளில் விற்பவற்றைத் தவிர்த்து நமது வீட்டிலேயே காய்ந்த சோளத்தை குறைவான எண்ணெயில் பொரித்துத் தரலாம்.
தேங்காய் பர்பி
இனிப்பு வகைகளை விரும்பும் குழந்தைகளுக்கு வெல்லம் கலந்த தேங்காய் பர்பி களும் உருண்டைகளும் ஏற்ற சாய்ஸ். வீட்டில் ஆரோக்கியமான முறையில் செய்யப்பட்ட பாதாம் முந்திரி அல்வா வகைகளும் சிறிய அளவில் செய்து தரலாம்.
காய்கறி சாலட் மற்றும் ஜூஸ்
கேரட் பிராக்கோலி வகை காய்களை சாலட்டாக உப்பு, மிளகுத்தூள் எலுமிச்சை சாறு சேர்த்து தரலாம். கேரட்டில் கீர் செய்தும் எலுமிச்சை ஆரஞ்சில் கொஞ்சம் குளுக்கோஸ் சேர்த்து ஜூஸ் செய்தும் தரலாம். களைப்பு நீக்கும்.
எது என்றாலும் கூடியவரை கடைகளில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் அது தரமான சுகாதாரமான கடையா எனப் பார்த்து வாங்க வேண்டும்.