Snake Gourd Raitha.
Snake Gourd Raitha.

Snake Gourd Raitha: வெயிலுக்கேற்ற சுவையான புடலங்காய் ராய்தா!

கோடைக்கேற்ற நீர்ச்சத்து மிகுந்தது புடலங்காய். இதனை பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டாகவும், தேங்காய் சேர்த்து பொரியலாகவும், ராய்தா என விதவிதமாக செய்து சுவைக்கலாம். மருத்துவ குணம் நிறைந்த புடலங்காய் எளிதில் ஜீரணமாகக் கூடியது. புடலங்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதில் நார்ச்சத்து, விட்டமின் ஏ, பி, சி, கால்சியம், இரும்பு மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. இதில் ஊட்டச்சத்து அதிகம் இருந்தாலும் குறைந்த கலோரி இருப்பதால் எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.

சிறந்த நாட்டு காய்கறியான புடலங்காயைக் கொண்டு ராய்தா எப்படி செய்வது? என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • பிஞ்சு புடலங்காய் 1 

  • சின்ன வெங்காயம் 4 

  • உப்பு தேவையானது 

  • கெட்டித் தயிர் 1 கப் 

  • தேங்காய் துருவல் 2 ஸ்பூன் 

  • பச்சை மிளகாய் 2 

  • கொத்தமல்லித் தழை சிறிது 

  • கடுகு 1 ஸ்பூன் 

  • உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன் 

  • சீரகம் 1/2 ஸ்பூன் 

  • எண்ணெய் ஒரு ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
காய்கறிகளை சமைக்கும்போது இந்த 5 தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க!
Snake Gourd Raitha.

செய்முறை:

புடலங்காய் ராய்தா பிஞ்சு புடலங்காயாக வாங்கி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். புடலங்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சீரகம், தேங்காயுடன் சேர்த்து அரைத்தெடுக்கவும். வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு இரண்டையும் எண்ணெய் விட்டு தாளித்து பொடியாக நறுக்கிய புடலங்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் சேர்த்து சிறிது வதக்கி ஆற விடவும்.   

இப்பொழுது ஒரு கிண்ணத்தில் வதக்கிய காயுடன் அதிகம் புளிப்பில்லாத கெட்டித் தயிர், அரைத்த தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாற மிகவும் ருசியாக இருக்கும். இதனை துவையல் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி, பூரி என அனைத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம்.

இந்த ஆரோக்கியமான ரெசிபியை ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com