
எப்போதும் இட்லி தோசை என்று இருந்த டிபன் வகைகளில் இன்று பூரி, சப்பாத்தி இடம் பிடித்து விட்டது. முக்கியமாக தற்போது பெருகிவரும் நீரிழிவு என்னும் ஒரு பூதாகரமான உடல் நல பாதிப்புக்கு உகந்தது என கோதுமை மாவில் செய்த இந்த காலை உணவு ஐட்டங்கள் இப்போது காலை, மதியம், இரவு என வேளை பாகுபாடு இன்றி நம் தட்டில் இடம் பிடிக்கிறது.
கோதுமையில் உள்ள நார்ச்சத்து நமது உடலுக்கு நன்மையை தருகிறது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சப்பாத்தியை விரும்பி உண்கிறார்கள். சப்பாத்தி மட்டும் செய்தால் போதுமா அதற்கு தொட்டுக்கொள்ள விதவிதமான கிரேவிகள், குருமாக்கள் என செய்யணுமே?
வடநாட்டிலிருந்து இங்கு இறக்குமதியான விஷயங்களில் ஒன்று கிரேவிகள். நம்மூரில் பூரி என்றால் உருளைக்கிழங்கு மசாலாவும், சப்பாத்தி என்றால் தக்காளி குருமாவும் மட்டுமே டிரெண்டாக இருந்த நிலையில் தற்போது எளிதாக செய்யக்கூடிய வகைகளில் கிரேவியும், குருமா வகைகளும் புதிது புதிதாக களம் இறங்குகிறது . இதனால் சாப்பிடுபவர்களுக்கும் ருசியான சப்பாத்தியை சாப்பிட்ட மகிழ்ச்சி.
நாம் உணவகங்களுக்கு செல்லும்போது சாப்டான சப்பாத்தியுடன் வெஜிடபிள் குருமா என்று ஒன்றே தருவார்கள், அதை பார்த்தால் நமது வீட்டில் இப்படி வைக்க முடியவில்லை எனும் ஏக்கம் எழும் . இதோ உங்கள் ஏக்கத்தை போக்க இங்கு ஹோட்டல் வகை குருமா ரெசிபி...
கலர்புல் வெஜிடபிள் குருமா
தேவையானவை
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 3
பூண்டு - 8 பற்கள்
இஞ்சி - 1 அங்குலம்
புதினா - ஒரு கைப்பிடி
கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் கலந்து - 1/2 கிலோ
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய் பால் - 2 கப்
கொத்தமல்லித்தழை - சிறிது
எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
ஒரு மிக்ஸியில் அரிந்த ஒரு வெங்காயம், தக்காளி, பூண்டு , இஞ்சி இவற்றுடன் ஆய்ந்து கழுவிய புதினாவை சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சோம்பு போட்டு பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் போட்டு நன்கு சிவக்க வதக்கி அதனுடன் இந்த அரைத்து வைத்த கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
இதன் மணமே ஜம் என்று இருக்கும். நன்கு வதங்கியதும் இதில் தேவையான அளவு அரிந்த காய்கறி, பட்டாணி வகைகளை போட்டு மேலும் வதக்கவும். அதனுடன் தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள் அதாவது தனியாத்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கி தேவையான நீரூற்றி மூடி போட்டு காய்கறிகளை 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
முக்கால் பதம் வெந்ததும் மூடியை திறந்து தேங்காயை துருவி ஆட்டி பிழிந்து வைத்துள்ள கெட்டி தேங்காய்ப்பாலை அதனுடன் ஊற்றி 6 அல்லது 8 நிமிடங்கள் மட்டும் கொதிக்க வைத்து மேலே நறுக்கிய கொத்தமல்லித்தழை போட்டு இறக்கவும். இந்த குருமா தேங்காய் பால் ருசியுடன் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அப்படியே ஹோட்டல்களில் இருக்கும் வெஜிடபிள் குருமா போலவே இருக்கும். அத்துடன் முதல் நாள் சிரமம் பார்க்காமல் காய்கறிகள் நறுக்கி , தேங்காய் துருவி வைத்து விட்டால் செய்வதும் எளிதாக இருக்கும். பொதினா அவரவர் சாய்ஸ்.