ரசத்தைப் பற்றி சில சுவையான ரகசியங்கள்!

ரசத்தைப் பற்றி சில சுவையான ரகசியங்கள்!

சத்தை கேஸில் வைக்கும்போது, திகுதிகுவென எரிய விடாமல், சிம்மில் வைத்துத்தான் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நன்கு நுரைத்து வரும். நுரைத்து கொப்புளங்கள் வர ஆரம்பித்ததும் இறக்கிவிட்டால் ரசம் சூப்பர் மணமாக இருக்கும்.

3 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் தனியா எடுத்துக்கொண்டு, முதலில் சீரகத்தைப் போட்டு நைசாகப் பொடித்துக்கொண்டு, அதிலேயே மிளகு, தனியா போட்டு ஒன்றிரண்டாகப் பொடித்து ரசத்தில் சேர்க்கவும்.

ரசப் பொடியை புளித் தண்ணீரில் போடும்போது அப்படியே போடுவதற்கு பதில், ரசப் பொடியை புளித் தண்ணீரில் நன்கு கையால் பிசைந்துவிட்டால் வாசனை மிகுதியாக இருக்கும்.

எண்ணெயில் ஒரு மிளகாய் வற்றல், கடுகு போட்டுப் பொரிந்ததும், பெருங்காயத்தூள் போட்டு (எண்ணெயை ரொம்பவும் புகைய விடாமல் ரசத்தில் கொட்ட வேண்டும்.) பச்சை மிளகாய் ஒன்றை கீறி கொதிக்கும் ரசத்தில் சேர்த்தால் சூப் போன்று அவ்வளவு மணமாக இருக்கும்.

பூண்டைத் தட்டிப் போடுவதாகயிருந்தாலும் இறக்கும்போதுதான் போட வேண்டும். பூண்டைத் தோலுடன் தட்டினால்தான் வாசனையாகயிருக்கும்.

தக்காளியை மிக்ஸியில் அடித்துச் சேர்த்தால், சிறிது கூட வேஸ்ட் ஆகாது. ரசமும் நல்ல அழகிய கலரில் இருக்கும்.

கொத்துமல்லி, கருவேப்பிலை கண்டிப்பாக ரசத்தை இறக்கியவுடன்தான் சேர்க்க வேண்டும்.

பருப்பு ரசத்திற்கு, பருப்புடன் இரண்டு தக்காளி சேர்த்து வேகவிட்டு, கடைந்து ரசம் கொதித்து இறக்கும்போது சேர்க்க வேண்டும். பருப்புத் தண்ணீரை ரசத்தில் ஊற்றி கொதிக்க வைக்கக் கூடாது.

பருப்பை வேகவைக்க நேரமில்லாதபோது ஒரு பிடி து.பருப்பை நீரில் நனைய வைத்து அரைத்துச் சேர்க்கலாம். பருப்பு ரசத்திற்கு ஒரு துண்டு வெல்லம் சேர்த்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

ஒரு நாள் பன்னீர் ரசம் வைக்கலாம். புளி குறைவாக சேர்த்து பருப்பு ரசம் வைத்து, அதில் இறக்கியவுடன் ரோஜா இதழ்களையும், கொத்துமல்லி இலைகளையும் சேர்த்து, நன்கு ஆறியவுடன் எலுமிச்சம் பழம் பிழியவும்.

காய்கறிகள், கீரை வேக வைத்த நீரைக் கீழே கொட்டாமல், ரசத்தில் சேர்த்து இன்னும் சத்துள்ளதாக செய்யலாம்.

மிளகாய் வத்தல், தனியா, க.பருப்பு, மிளகு முதலிய வைகளை சிறிது எண்ணெய் விட்டு சிவப்பாக வறுத்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். இதைப் புளித் தண்ணீரில் சேர்த்து நுரைத்து வந்ததும், வெந்த பருப்பையும் சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவலை வறுத்துரைத்து சேர்த்து ரசத்தை இறக்கி வைத்து, சிறது நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்தால் மைசூர் ரசம் ரெடி.

மாதக் கடைசியில் மிளகு, சீரகம் பற்றாக்குறையாக இருக்கும்போது சுவையான ‘வெந்திய வெங்காய ரசம்’ தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் எண்ணெயில் மிளகாய் வற்றல் இரண்டைக் கிள்ளிப் போட்டு கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை போட்டு பொரிந்ததும், வெந்தயம் 1 ஸ்பூன், து.பருப்பு 1 டேபிள் ஸ்பூன் அதே எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு 100 கிராம் சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி (சாதாரண ரசத்தைவிட சிறிது புளிப்புகூட இருந்தால் ருசியாகயிருக்கும்) ம.தூள், உப்பு சேர்க்கவும். கடைசியில் ஒரு கரண்டி தேங்காய்ப் பால் விட்டு இறக்கினால் அபாரமாகயிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com