சமையலில் ருசியை கூட்ட சில சுவையான குறிப்புகள்!

tasty samayal tips
healty recipes...Image credit - youtube.com
Published on

கெட்டித் தயிர் வேண்டுமா? பாலை லேசாக சூடுபடுத்தி சிறிது சர்க்கரை சேர்த்து உறை ஊற்ற தயிர் கெட்டியாகவும், ருசியாகவும் கிடைக்கும்.

கோதுமை ரவையை அடைக்கு ஊறவைப்பது போல் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, 6 காய்ந்த மிளகாய்  சேர்த்து ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்து அடை செய்ய மிகவும் சுவையாக இருக்கும்.

கேசரி செய்யும்போது நீரின் அளவை குறைத்து பால் சேர்த்து செய்ய நிறமும், மணமும், ருசியும் கூடும். கடைசியாக சிறு துண்டுகளாக்கப்பட்ட பேரீச்சை அல்லது அன்னாசி பழத் துண்டுகளை சேர்த்து கிளற கேசரியை அனைவரும் விரும்பி உண்பார்கள். 

முருங்கைக்கீரை பொரியல் செய்யும்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி நிறம் மாறும் முன்பு தேங்காய் துருவல் சேர்த்து எடுத்து விட வேண்டும். 

அதுவே அகத்திக்கீரை என்றால் பச்சை நிறம் மாறும் வரை சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய்த் துருவல், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இறக்க வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது.

கீரைகள் வாடாமல் இருக்க அதன் வேர்பாகத்தை அகற்றிவிட்டு ஒரு பேப்பரில் சுற்றி கவருக்குள் வைத்து  ஃப்ரிட்ஜில் வைத்து சமைக்க இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் கீரைகள் வாடாமல் பச்சை பசேல் என இருக்கும்.

புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவை வாங்கி வைத்து மறந்துவிட்டால் சில நாட்களில் அவை வாடிவிடும். அவற்றை தூர எறியாமல் காம்புகள் நீக்கி வெறும் வாணலியில் இரண்டு நிமிடம் வதக்கி மிக்ஸியில் பொடி செய்து பொரியல், குழம்பு ஆகியவற்றில் போட மணத்துடன்  ருசியையும் கூட்டும்.

தக்காளி பழங்களை சிறிது உப்பு கலந்த நீரில் போட்டு வைக்க நீண்ட நாட்களுக்கு கெட்டியாக கெடாமல் இருக்கும்.  

தக்காளி பழங்களாக இல்லாமல் காய்களாக வாங்கிவிட்டால் அவற்றை பழுக்க வைக்க நியூஸ் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைக்க இரண்டு நாட்களில் நன்கு பழுத்து விடும்.

இதையும் படியுங்கள்:
சத்தான முறுக்கு வகைகள்!
tasty samayal tips

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு தோல் நீக்கிய உருளைக்கிழங்கை சீவி உப்பு கலந்த நீரில் பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின்பு காற்றாட ஒரு துணியில் பரத்தி போடவும். பிறகு பொரிக்க சிப்ஸ் வெள்ளையாக, மொறு மொறு வென்று வரும்.

வடைக்கு அரைக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்து அரைத்து வடை தட்ட சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.

புளியோதரையில் ருசி கூட ஒரு ஸ்பூன் தனியா, பத்து மிளகு, தோல் நீக்கிய வேர்க்கடலை ஒரு கைப்பிடி சேர்த்து வறுத்து கொரகொரப்பாக பொடித்து கடைசியில் சேர்த்து கலந்து விட சூப்பர் சுவையில் இருக்கும்.

இட்லிக்கு சட்னி அரைக்கும்பொழுது பொட்டுக்கடலை, தேங்காய், சிறிது வறுத்த வேர்க்கடலை, 2 பல் பூண்டு, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்க சட்னி மிகவும் அருமையாக இருக்கும்.

வெண்டைக்காய் பொரியலுக்கு வறுத்த வேர்க்கடலையை சிறிது வறுத்த கசகசாவுடன் சேர்த்து பொடித்து போட்டு கிளற ருசியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com