பப்பாளி மலச்சிக்கல் நீக்கும் பழம் என்று தெரியும். உணவுக்குப் பின் நான்கு துண்டு பப்பாளித் துண்டுகளை தினம் எடுத்துக் கொள்வது சிறந்த பலன் தரும். அதே போல இஞ்சியின் மருத்துவ குணங்களை அறிவோம். இருமல் தொண்டைப் புண் போன்றவற்றை தடுக்கும் குணம் கொண்டது. இது குளிர் காலம் என்பதால் நம் உடலுக்கு ஏற்ற சூப் வகைகளை செய்து அனைவரும் அருந்தினால் நலன் பெறலாம். முக்கியமாக இஞ்சி பிடிக்காத குழந்தைகளும் இந்த சூப்பை நிச்சயம் விரும்புவார்கள்.
தேவையான பொருள்கள்:
பப்பாளிப் பழம் சிறியது – ஒன்று
இஞ்சி – சிறிய துண்டு ( ஒரு இஞ்ச் )
வெங்காயம் - ஒன்று (நறுக்கியது )
காய்கறிகள் வேகவைத்த நீர் – 3 கப் ( கேரட் பீன்ஸ் பீட் ரூட் இப்படி )
மிளகுத் தூள் – தேவைக்கேற்ப
கிரீம் – சிறிதளவு
நறுக்கிய கொத்துமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவைக்கு
வெண்ணெய் அல்லது எண்ணைய் – தேவைக்கு
செய்முறை:
ஒரு கடாயில் வெண்ணைய் அல்லது எண்ணைய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் துண்டுகளாக்கிய பப்பாளி இஞ்சி சேர்த்து வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்து தேவைப்பட்டால் வடிகட்டவும். (வடிக்கட்டாமல் அப்படியே பயன்படுத்துவது நல்லது).
ஒரு பாத்திரத்தில் காய்கறிகள் வேகவைத்த வடிகட்டிய நீருடன் இந்தக் கலவையை சேர்த்துக் கொதிக்க விட்டு தேவையான உப்பு மிளகுத்தூள் சேர்த்து, சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி ஒரு கப்பில் ஊற்றி மேலே நறுக்கிய கொத்துமல்லித்தழை மற்றும் கிரீம் சேர்த்துக் குடிக்கத் தந்தால் பிள்ளைகள் இன்னும் இன்னும் என்று கேட்பார்கள்.