தினம் கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் மருத்துவரிடம் செல்லும் நிலை தடுக்கப்படும். ஏனெனில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் அடங்கி உள்ளது.
ஆனால் நம் வீட்டுப் பிள்ளைகள் கீரை என்றாலே காததூரம் ஓடுகிறார்களே என்ன செய்ய? அவர்கள் விரும்பும் ருசியில் கீரைகளை செய்து தருவது ஒன்றுதான் வழி. இதோ நாம் அன்றாடம் காணும் பசலைக்கீரை பற்றியும் அதில் செய்யும் புலாவ் மற்றும் கடைசல் செய்முறையும் இங்கு.
பசலைக்கீரை அல்லது பாலக்கீரையில் மாங்கனீசு, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்கள் நிறைந்து உடல் நலன் தருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இதை உணவில் எடுக்க வேண்டும். குறிப்பாக பருப்புகளுடன் சேர்த்து செய்யும் கீரை வகைகள் மிகவும் நன்மை தருகின்றன.
உடல் எடை குறைப்பவர்களுக்கு இயற்கை தந்த வரம் இந்த கீரை. இதிலுள்ள கரோட்டினாய்டு என்ற லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டவை. இதனை உணவில் சேர்க்கும்போது, கெட்ட கொலஸ்ட்ரால் நம் உடலில் தேங்குவதைத் தடுத்து எடையை சீராக பராமரிக்கலாம்.
பசலைக்கீரை புலாவ்
தேவை:
பாஸ்மதி அரிசி அல்லது சீரகசம்பா அரிசி ஒரு கப்
பசலைக்கீரை - ஒரு கட்டு
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பட்டை- சிறு துண்டு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி - 6
எண்ணெய் அல்லது நெய் - தேவவக்கு ஏற்ப
உப்பு –தேவைக்கு
செய்முறை:
பசலைக் கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து கனமான பாத்திரத்தில் சிறிது நீரூற்றி பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மிதமாக வேகவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின் குக்கரில் எண்ணெய் அல்லது நெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பட்டை, சோம்பு போட்டுத் தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுதையும் வாசம் போக வதக்கிய பிறகு தேவையான உப்பு அரைத்த கீரை விழுதை சேர்த்து வதக்கி ஒன்றரை கப் நீர் சேர்த்து நன்கு கொதித்ததும் கழுவி வடித்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைத்து வெயிட் போட்டு 2 விசில் விட்டு ஆவி அடக்கியதும் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறலாம். சிம்பிளான வித்யாசமான கீரை புலாவ் தயார்.
பசலைக்கீரை கடையல்
தேவையானவை:
பசலைக்கீரை -ஒரு கப்
சீரகம் -ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -6 அல்லது 7
பச்சை மிளகாய் -1
பாசிப்பருப்பு- ஒரு கைப்பிடி
தக்காளி - ஒன்று
செய்முறை:
பசலைக்கீரையை நன்கு கழுவி இரண்டு இரண்டாக நறுக்கி அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஒன்று, அரிந்த தக்காளி, சீரகம் சிறிது சேர்த்து நன்கு வேகவைத்து அதனுடன் வறுத்து வேகவைத்த பாசிப்பயறு சேர்த்து மத்தால் நன்கு கடைந்து கொள்ளவும். இல்லை என்றால் மிக்சி ஸ்வைப்பரில் ஒரு சுழற்று சுழற்றிக் கொள்ளவும். தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் போட்டு (தேவைப்பட்டால் ஒரு வரமிளகாய் கிள்ளிப் போடலாம்) பொரிந்ததும் இதில் கொட்டவும். சூடான சாதத்துடன் கடைசலை போட்டு சாப்பிட்டால் சூப்பர்.