

மணத்தக்காளி கீரை வாங்கும்போது அதில் சின்ன சின்ன உருண்டை வடிவத்தில் காய்களும் சேர்ந்திருக்கும். பச்சை நிறத்தில் இருக்கும் இந்த காய்களை சேகரித்து வைத்து அருமையான குழம்பு செய்யலாம்.
(Spinach recipes) செய்முறை:
மணத்தக்காளி காய் - இரண்டு ஸ்பூன்
சிறிய வெங்காயம் -20
தேங்காய் துருவல- நான்கு ஸ்பூன்
தக்காளி - இரண்டு
புளி -சிறிய நெல்லிக்காய் அளவு
வரக்கொத்தமல்லி- இரண்டு ஸ்பூன்
வர மிளகாய் - நான்கு
கருவேப்பிலை -சிறிதளவு
சாம்பார் பொடி- ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
வெல்லம் -சிறு துண்டு
பெருங்காயம் சிறிதளவு
எண்ணெய், உப்பு தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொத்தமல்லி யையும் வரமிளகாயையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உரித்து நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயத்தை போட்டு மிதமான தீயில் வைத்து அதை வதக்கவும். உடன் தக்காளி பழங்களை நறுக்கி சேர்க்கவும். அந்த கலவை நன்றாக வெந்ததும் அதை தனியே எடுத்து வைக்கவும். நன்றாக ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் மல்லி விதைகளையும் வரமிளகாயையும் போட்டு கொரகொரப்பாக அரைத்து அதிலேயே வெங்காய தக்காளி கலவை தேங்காய் துருவலை சேர்த்து நைசாக சந்தன பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மணத்தக்காளி காய்களை போட்டு பொறிக்கவும். அது சிவக்க வறுபட்டதும் கருவேப்பிலையை போட்டு அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் போட்டு நன்றாக வேகவைக்கவும். பச்சை வாசனை போக குழம்பு நன்றாக கொதித்து வந்ததும் வெல்லத்தூளை போடவும். தேவையான உப்பு போடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் குழம்பை இறக்கி விடவும். மிக மிக சுவையான சத்தான மணத்தக்காளி காய் குழம்பு தயார்.
-எஸ். விஜயலட்சுமி