பொருள் ஒண்ணு; வெரைட்டி நாலு!

பொருள் ஒண்ணு; வெரைட்டி நாலு!
Published on

ரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கவும், உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான சத்தான உணவோடு உடல் எடை குறையவும் வரகு உணவு நல்ல தீர்வாக இருக்கும். வரகு அரிசி மாவைக்கொண்டு செய்யும் சில இனிப்பு வகைகளைப் பார்ப்போம்.

வரகு ஸ்வீட் பர்பி

தேவை: மெஷினில் அரைத்த வரகு அரிசி மாவு – 1 கப், மிக்ஸியில் அரைத்த பொட்டுக் கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 1½ கப், நெய் – 1 கப், ஏலப்பொடி – ½ டீஸ்பூன்.

செய்முறை: வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். பிசுக்குப் பதம் வந்ததும், அடுப்பைக் குறைத்து வைத்து வரகு அரிசி மாவைத் தூவிக் கிளறவும். பொட்டுக்கடலை மாவையும் சேர்த்துக் கிளறி, நெய்யைச் சிறிதுச் சிறிதாக ஊற்றி, ஏலப்பொடியையும் சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பக்குவத்தில் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டு போடவும்.

நாவில் பட்டதும் கரைந்து காணாமல் போகும் இந்த இனிப்பைத் தயாரிப்பது மிகவும் சுலபம்.

வரகுத் தேன்குழல்

தேவை: மெஷினில் அரைத்த வரகு அரிசி மாவு – 1 கப், வறுத்து மிக்ஸியில் அரைத்த வெள்ளை உளுத்தம் பருப்பு மாவு – ¼ கப், வெண்ணெய், வெள்ளை எள்ளு – 2 டீஸ்பூன், பெருங்காயப் பொடி – ½ டேபிள் ஸ்பூன், உப்புத்தூள், ரீஃபைண்ட் ஆயில் – தேவைக்கேற்ப.

செய்முறை: பெருங்காயத் தூளையும், உப்பையும் சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வரகு அரிசி மாவு, உளுத்தம் மாவு, எள் ஆகியவற்றை நன்கு கலந்தபின் பெருங்காயம், உப்பு நீர் சேர்த்து கலக்கி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துப் பிசையவும். தேன் குழல் அச்சில் முறுக்காகப் பிழியவும். கரகரவென்று வாயில் கரையும்.

வரகு கேரட் பால்ஸ்

தேவை: வரகு அரிசி – 100 கிராம், கேரட் – 200 கிராம், மிக்ஸியில் அரைத்த பொட்டுக் கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் – 2, சோம்பு -1 டேபிள் ஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, ரீஃபைண்ட் ஆயில், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: வரகு அரிசியை மிக்சியில் மாவாகப் பொடிக்கவும். அத்துடன் மிளகாய் வற்றல், சோம்பையும் சேர்த்துப் பொடிக்கவும். கேரட்டைத் துருவி தனியாக மிக்ஸியில் இஞ்சி, உப்பு சேர்த்துத் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.  இந்த விழுதோடு ஏற்கெனவே பொடித்திருக்கும் கலவையைச் சேர்க்கவும். சிறிதளவு புதினா, மல்லியை நைசாக நறுக்கிப் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக்கி அத்துடன் தேவையான அளவு பொட்டுக் கடலை மாவு சேர்த்துப் பிசைந்து சற்றே தளர்ச்சியான பக்குவத்தில் மூடி வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறியபின் கலவை மிருவாக, உருட்டும் பக்குவத்தில் இருக்கும். சிறு உருண்டைகளாகக் காய்ந்த எண்ணெயில் பொரிக்கவும்.

சாப்பாட்டுக்கு சைட் டிஷ்ஷாகவும், மாலை நேரச் சிற்றுண்டியாகவும், சாப்பிட சுவையான பதார்த்தம் இது.

வரகுப் பொரிவிளாங்காய்

தேவை: வரகு அரிசி – 1 கப், பாசிப் பருப்பு – ½ கப், பச்சரிசி – ¼ கப், உருண்டை வெல்லம் – 300 கிராம், பொட்டுக் கடலை – 50 கிராம், வெள்ளை எள் – 2 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – ¼ டீஸ்பூன், தேங்காய் சிறிய மூடி – 1 நெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: வரகு அரிசி, பாசிப் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றைத் தனித்தனியாக வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து, அத்துடன் பொட்டுக் கடலையும், வெள்ளை எள்ளையும் (வெறும் வாணலியில் பொரித்தது) சேர்த்துக் கலக்கி வைக்கவும். வெல்லப்பாகு காய்ச்சிக் கொதிக்கும்போதே மெல்லிசான சிறுதுண்டுகளாக நறுக்கிய தேங்காயைச் சேர்த்து ஏலப்பொடியைச் சேர்க்கவும். கம்பிப் பதம் வரும்போது, இறக்கி மாவில் ஊற்றி நெய் சேர்த்துக் கிளறி, பிறகு உண்டைகளாகப் பிடிக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com