சுரைக்காயில் உடல் சூட்டைக் குறைக்கும் தன்மை உள்ளது. மேலும், நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்களும் சுரைக்காய் அதிகமாக சாப்பிடலாம். குறிப்பாக இதில் வைட்டமின் பி, சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும். இன்று இந்த சுரைக்காய் பயன்படுத்தி பொரிச்ச கூட்டு எப்படி செய்யலாம் எனப்பார்க்கலாம்.
இப்படி சுரைக்காயில் கடலைப்பருப்பு சேர்த்து பொரிச்சு கூட்டு செய்யும்போது அதை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கும் இதன் சுவை ரொம்ப பிடிக்கும் என்பதால் அவ்வப்போது அவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - ½ கிலோ
வரமிளகாய் - 5
சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய் - 2 சில்
உப்பு - தேவையான அளவு
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு - ½ ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 50 கிராம்
செய்முறை:
முதலில் பொரிச்ச கூட்டு செய்வதற்குத் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சீரகம், வரமிளகாய், உளுத்தம் பருப்பு, ஆகியவற்றை வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் கடலை பருப்பை நன்றாகக் கழுவி இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் சுரைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி பருப்பில் சேர்த்து, அரைத்த மசாலா உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக வேக விட வேண்டும். இது கெட்டியான பதம் வரும்வரை வேக வைக்க வேண்டும்.
இறுதியாக மற்றொரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து, சுரைக்காய் கலவையில் கொட்டவும். அவ்வளவுதான் சூடான சுவையான பொரிச்ச சுரைக்காய் கூட்டு தயார்.