

கேப்ஸிகத்தில் அல்வாவா என்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் என் உறவினப்பெண் செய்து அசத்தினார். அதை செய்யும் விதம் இதோ:
கேப்ஸிகம் மூங்தால் அல்வா
செய்யத் தேவையான பொருட்கள்:
மஞ்சள் கலர் கேப்ஸிகம் -ஒன்று
பாசிப்பருப்பு லேசாக வறுத்தது- ஒரு கப்
சர்க்கரை- இரண்டு கப்
நெய் -அரை கப்
திக்கான பால்- இரண்டு கப்
முந்திரி, திராட்சை, வறுத்தது- தலா 10
வெள்ளரி விதை- ஒரு டீஸ்பூன்
ஏலத்தூள் -அரை டீஸ்பூன்
செய்முறை:
குடைமிளகாயை அரிந்து அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு அதனுடன் பாசிப்பருப்பை சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு குக்கரில் குழைய வேகவிட்டு மசிக்கவும். சர்க்கரையை கம்பி பாகு காய்ச்சி அதில் மசித்து வைத்திருக்கும் இந்தக் கலவையை சேர்த்து, திக்கான பாலை அதில் ஊற்றி மிதமான தீயில் அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவேண்டும். பின்னர் நெய் சேர்த்து கிளறி ஏல பவுடர் தூவி, அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை கிளறி இறக்கி வெள்ளரி விதை, முந்திரி, திராட்சையை மேலாகத் தூவி பரிமாறவும். வித்தியாசமான ருசியில் அசத்தலாக இருந்தது.
பயத்தம் பருப்பு சட்னி
செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய்த் துருவல்- அரை கப்
பச்சை மிளகாய்- இரண்டு
வறுத்த பயத்தம் பருப்பு- 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க: சீரகம், ஒடித்த வர மிளகாய் இரண்டு, கருவேப்பிலை, பெருங்காயம், ஒரு டீஸ்பூன் எண்ணெய்.
செய்முறை:
பச்சை மிளகாயுடன் பருப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும். பின்னர் தாளிக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அது காய்ந்தவுடன் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். இட்லி, தோசை உடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும் சட்னி இது.
பலட்டூர் சட்னி
செய்யத் தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்க்கடலை -3 டேபிள்ஸ்பூன்
தக்காளி- ஒன்று
வெங்காயம் -ஒன்று
பச்சை மிளகாய் -ஆறு
புளி- சிறிதளவு
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தக்காளியை முழுதாக அந்த எண்ணெயில் திருப்பித் திருப்பி ஒவ்வொரு பகுதியாக போட்டு லேசாக அந்த தக்காளி வெந்து இருக்க வேண்டும். லேசாக ஒரு கருகல் வாடை வரவேண்டும் அது போல் செய்து எடுத்து வைக்கவும். அதோடு வெங்காயத்தையும் லேசாக வதக்கி, பச்சை மிளகாயையும் அதேபோல வதக்கி எடுத்து வைக்கவும்.
மிக்ஸியில் வேர்க்கடலையை தோலுடன் பொடித்துக் கொள்ளவும். பின்னர் வறுத்து வைத்த எல்லாவற்றையும் பொடித்த வேர்க்கடலை பொடி உடன் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் புளி போட்டு குறைந்த அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்தெடுக்கவும். இந்த பலட்டூர் பச்சடி மிகவும் வித்தியாசமான ருசியில் சத்தம். Charred டேஸ்டில் இருப்பதுதான் இதன் தனி சிறப்பு. ஆந்திராவில் கிராமப்புறங்களில் செய்யப்படும் ருசீகரமான பச்சடி இது.