வெல்லச்சீடை
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி- 1 கப்பு
உளுத்தம் பருப்பு -1/4 கப்பு
வெல்லம்- 11/2 கப்பு
தேங்காய் - 1/2 கப்பு
எள்-1மேஜைக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
சுக்குப் பொடி- 1 ஸ்பூன்
சூரியகாந்தி எண்ணெய் - சீடையைப் பொரித்தெடுக்க.
செய்முறை:
1.பச்சரிசியை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடித்து ஒரு வேட்டியில் நன்கு உலர விட்டு மிக்ஸியில் மாவு போல் பொடித்துக் கொள்ளவும். பொடித்த மாவை ஒரு சல்லடைக் கொண்டு சலித்துக் கொள்ளவும்.
2. சலித்த அரிசி மாவை சிறிதளவு வறுத்துக் கொள்ளவும். மாவை வறுக்கும் பொழுது சிறிய கட்டிகள் உருவாகும். வறுத்த மாவு நன்கு ஆறிய பிறகு இன்னும் ஒரு முறை மிக்ஸியில் பொடிப்பதன் மூலம் கட்டிகள் மறையும்.
3. உளுத்தம் பருப்பைச் சிறிதளவு வறுத்துக் கொண்டு மிக்ஸியில் பொடித்துச் சலித்துக் கொள்ளவும்.
4.வெல்லத்தை ஒரு கடாயில் போட்டு ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு உருக விடவும். கெட்டிப் பதத்திற்கு வெல்லத்தை உருக விடாமல் நன்கு கரைந்து சிறிய முத்துக்களைப் போலக் கொதிக்கும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
5. வெல்ல கரைசலுடன் தேங்காய்,ஏலக்காய்ப் பொடி, சுக்குப்பொடி, இரண்டு ஸ்பூன் உளுத்தம் பொடி சேர்த்து வறுத்த அரிசி மாவில் விட்டு நன்கு கிளறவும். இந்த வெல்லச் சீடை மாவை சிறிது நேரம் ஊற வைக்கவும். வெல்லச் சீடை இன்னும் சிறப்பாக வர வேண்டுமெனில் சுடுவதற்கு ஒரு நாள் முன்பே இந்த மாவைப் பிசைந்து ஊற வைத்துக் கொள்ளவும்.
6. மாவு பிசையும் போது சிறிதளவு ( 2 ஸ்பூன்) நன்கு கொதிக்கும் எண்ணெயை அல்லது நெய்யைச் சேர்த்துப் பிசைந்தால் சீடை இன்னும் கரகரவென்று இருக்கும்.
குறிப்பு: மிதமானச் சூட்டில் சீடையைப் பொரித்து எடுக்கவும். அடுப்பின் வேகம் கூடுதலாக இருந்தால் சீடை வெளிப்பாகத்தில் பொன் நிறமாகவும் உட்பகுதியில் வேகாமலும் இருக்கும். எனவே, மிதமானச் சூட்டில் பொரித்தெடுக்கவும்.
********************
கிருஷ்ண ஜெயந்திக்கு அப்பம் தயார் செய்வது எப்படி ?
அப்பங்களில் இரண்டு வகைகள் உண்டு. அவையாவன...
அரிசி மாவு அப்பம்
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி- 1 கப்பு
வெல்லம்-1 கப்பு
தேங்காய் - 2 மேஜைக் கரண்டி
ஏலக்காய்த் தூள்- 1/4 ஸ்பூன்
சூரியகாந்தி எண்ணெய் - ஆப்பம் பொரிப்பதற்கு.
செய்முறை:
1. பச்சரிசியை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை நன்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. ஊறிய பச்சரிசியுடன் ஒரு கப் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் தோசை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
3. சிறிதளவு தேங்காய்ச் சேர்த்து அரைக்கவும்.
4. ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
5. அப்பம் செய்யும் கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு அப்பங்களைப் பொரித்து எடுக்கவும்.
கோதுமை மாவு அப்பம்
தேவையானப் பொருட்கள்:
கோதுமை மாவு -1 கப்பு
வெல்லம் - 1 கப்பு
ஏலக்காய்த் தூள் -1/4 ஸ்பூன்
செய்முறை:
1.கோதுமை மாவுடன் வெல்லத்தைச் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும். இத்துடன் சிறிதளவு ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
2. அப்பம் செய்யும் கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிதமானச் சூட்டில் அப்பங்களை பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: மிதமான சூட்டில் அப்பத்தைப் பொரித்து எடுக்கவும். அடுப்பின் வேகம் கூடுதலாக இருந்தால் அப்பம் வெளிப்பாகத்தில் பொன்னிறமாகவும், உட்பகுதியில் வேகாமலும் இருக்கும். எனவே, மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.