தீபாவளி நெருங்கிவிட்டது இனி அனைவரின் கவனமும் என்ன இனிப்பு வகைகள் செய்யலாம் என்பதில்தான் இருக்கும். அதிலும் லட்டுக்கள் என்றால் எளிதாகவும் அதேசமயம் அனைவரும் விரும்பும் வகையிலும் இருக்கும் என்பதால் பண்டிகை சமயங்களில் லட்டுக்கே முதலிடம். சத்துள்ள எளிய வகை லட்டுகள் ரெசிபிகள் இங்கே.
கருப்பு உளுந்து லட்டு:
தேவை:
கருப்பு உளுந்து -ஒரு கப்
பச்சரிசி - ஒரு டேபிள் ஸ்பூன்
சுத்தமான வெல்லம் -முக்கால் கப்
சர்க்கரை - கால் கப்
நெய் - அரை கப்
செய்முறை:
பச்சரிசியை வெறும் கடாயில் பழுப்பு நிறமாகும் வரை வறுத்து எடுத்து வைக்கவும். கருப்பு உளுந்தையும் அதே கடாயில் மிதமான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்கவும். சிறிது நேரம் பிடிக்கும் என்பதால் நிதானமாக உளுந்தை வறுக்கவும். அடிக்கடி கிளறிவிட்டு வறுக்கவும். ஆறிய கருப்பு உளுந்தையும் அரிசியையும் சேர்த்து நைசாக மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். அகலமான தட்டில் அதைக்கொட்டி அதனுடன் பொடித்த வெல்லம் சர்க்கரையை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக உருக்கிய நெய் விட்டுக் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும். நெய் அதிகம் விட வேண்டாம். லட்டு பிடிக்கத் தேவைப்படும் அளவு மட்டுமே விடவேண்டும்.
அவல் பாதாம் லட்டு:
தேவை:
பாதாம் - அரை கப்
பேரிச்சை பழம் - அரை கப்
அவல் - அரை கப்
ஏலக்காய் - 8
நெய் – தேவைக்கு
செய்முறை:
அவலை வெறும் கடாயில் சிவக்க வறுத்து எடுக்கவும். அதே கடாயில் பாதாம் பருப்புகளை போட்டு நன்கு சூடாகும் வரை வறுத்து ஆறவிடவும். மிக்ஸியில் ஆறிய அவலுடன் பாதாம் ஏலக்காய் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். பிறகு கொட்டை நீக்கிய பேரிச்சை பழத்தை அதிலேயே சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். கடாயில் நெய்விட்டு பாதாம் அவல் கலவையை சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து பேரிச்சை கலவையில் சேர்ந்து மிருதுவாகும் வரை வதக்கவும். இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வதக்கினால் போதுமானது.
இந்த கலவையை ஆறவிட்டு இலேசான சூட்டில் இருக்கும்போது லட்டுக்களாக பிடிக்கவும். இது மிகவும் சத்தான ரிச்சான லட்டுக்களில் ஒன்று என்பதால் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து உபயோகிக்கவும்.
பொட்டுக்கடலை லட்டு:
தேவை:
பொட்டுக்கடலை- ஒரு கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - அரை கப்
ஏலக்காய்- 6
முந்திரி- 10
செய்முறை:
பொட்டுக்கடலையை நைசாக அரைத்து சலிக்கவும். பிறகு சர்க்கரையில் ஏலக்காய் சேர்த்து நைசாக பொடிக்கவும். நெய்யை சூடாக்கி ஒடித்த முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இப்போது அகன்ற பேசினில் நைசான பொட்டுக்கடலை பொடியுடன் சர்க்கரை ஏலக்காய் கலந்த பொடி மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். இதில் உருக்கிய நெய்யை ஊற்றி லட்டுகளாக இறுகப்பிடித்து வைக்கவும். நெய் உருண்டை பிடிக்கத் தேவையான அளவு இருக்க வேண்டும்.