மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு மிக எளிதில் செய்து கொடுக்கக்கூடிய நெல்லூர் போண்டா மற்றும், ஜவ்வரிசி அல்வா ரெசிபி வகைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்!
நெல்லூர் போண்டா:
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு-1 கப்
கடலைப்பருப்பு-1/4 கப்
பெரிய வெங்காயம்-2
பச்சை மிளகாய்-2
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை-1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் நன்கு ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் இட்லி மாவு எடுத்து அதனுடன் ஊறவைத்த கடலைப்பருப்பு சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு வானொலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, எண்ணெய் நன்கு சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு இருபுறமும் வேகவிட்டு பொரித்து எடுத்தால் சுவையான நெல்லூர் போண்டா ரெடி!
காரச் சட்னி மற்றும் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவை அட்டகாசமாக இருக்கும்!
ஜவ்வரிசி அல்வா:
தேவையான பொருள்கள்:
ஜவ்வரிசி -1 கப்
சர்க்கரை-2 கப்
நெய் - 1/4 கப்
முந்திரிப் பருப்பு -1 கைப்பிடி
செய்முறை:
ஜவ்வரிசி நன்கு சுத்தப்படுத்தி நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் அரை கப் சர்க்கரையை சேர்த்து அதனை மிதமான தீயில் உருக்கவும். நன்கு நிறம் மாறி பிரவுன் கலருக்கு சர்க்கரை பாகு வந்தவுடன் அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் மீதமுள்ள சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
சர்க்கரை கரைசல் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும்போது அரைத்து வைத்த ஜவ்வரிசி கலவையை அதனுடன் சேர்த்து மிதமான தீயில் நன்கு கலந்து விடவும். இடையிடையே சிறிதளவு நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து விடவும். தேவையான அளவு முந்திரி பருப்பை நெய்யில் நன்கு வறுத்து எடுத்து அதனையும் இந்த கரைசலோடு சேர்த்து அல்வா பதத்திற்கு வரும் வரை நன்கு கலந்து எடுத்தால் சுவையான ஜவ்வரிசி அல்வா ரெடி!