

சப்பாத்திக்கும் பூரிக்கும் விதவிதமாக எத்தனை சைட் டிஷ் பண்ணினாலும் ஒரு சிம்பிளான உருளைக்கிழங்கு குருமாவை அடிச்சிக்கவே முடியாது. இது பூரி சப்பாத்திக்கு மட்டும் இல்லாமல் இட்லி, தோசைக்கும் நல்லா பொருந்தி வரும். அதன் செய்முறை விளக்கத்தைப் பற்றி இதோ:
குருமா செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு தோல் சீவி சிறு சிறு துண்டங்களாக நறுக்கியது-2
பெரிய வெங்காயம் நீளவாக்கில் அரிந்தது -இரண்டு
பெரிய தக்காளி துண்டங்கள் ஆக்கி அரைத்தது-1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் கீறியது- இரண்டு
மஞ்சள் தூள் -சிறிதளவு
மல்லித்தூள் -ஒரு டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் -அரை டீஸ்பூன்
அரைக்க:
தேங்காய் துருவல்- கால் கப்
சோம்பு- அரை டீஸ்பூன்
முந்திரி -5
தாளிக்க:
அன்னாசி பூ -ஒன்று
பட்டை -சிறிய துண்டு
கிராம்பு -மூன்று
பிரிஞ்சி இலை- ஒன்று
எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்
மல்லித்தழை -ஒரு டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்து நன்றாக வெடித்து வரும்போது வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கி வரும் பொழுது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். வெங்காயமும் இஞ்சி பூண்டும் சேர்ந்த நன்றாக வதங்கி இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போன பிறகு, அரைத்த தக்காளி விழுதை சேர்த்து அதோட கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கும்போதே மஞ்சள் தூள் சேர்க்கவும்.
பின்னர் இவை வதங்கி நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்போது தனி மிளகாய்த் தூள், மல்லித்தூள் அனைத்தையும் சேர்த்து வதக்கி நறுக்கிய உருளைக்கிழங்கை இந்த மசாலாவில் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கி இரண்டு கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு ஸ்டவ்வை மீடியம் ஃப்ளேமில் வைத்து கொதிக்கவிடவும்.
மசாலாவின் கன்சிஸ்டெண்சிக்கு தகுந்தாற்போல் தண்ணீர் சேர்க்கவும். இவற்றை நன்றாக கொதிக்கவிட்டு உருளைக்கிழங்கு வெந்து எண்ணெய் நன்றாக பிரிந்து வரும் பொழுது, அரைக்க கொடுத்தவற்றை அரைத்து இதில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் தேவைப்பட்டால் தேவையான அளவு தண்ணீர் விட்டு மூன்று நிமிடம் கொதிக்கவிடவும். கரம் மசாலா பவுடர் மற்றும் மல்லித் தழையைத் தூவி மூன்று நிமிடம் கொதிக்கவிட்டு ஸ்டவ்வை ஆஃப் பண்ணிவிடவும்.
மிகவும் சிம்பிளான எல்லாத்துக்கும் ஈஸியா பொருந்துகிற இந்த உருளைக்கிழங்கு குருமாவை ட்ரை பண்ணிப்பாருங்கள்.
குறிப்பு:
எந்தவித குருமா செய்தாலும் வெங்காயம் நன்றாக வதங்கினால் குருமா டேஸ்டாக இருக்கும். வெங்காயமும், இஞ்சி பூண்டு பேஸ்ட்டும் நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து சேர்ந்து வரும் வரை வதக்குவது இதற்கு முக்கியம்.
தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து அரைத்த விழுதை மூன்று நிமிடத்திற்கு மேல் கொதிக்கவிட்டால் ருசி மாறிவிடும். ஆதலால் அதிகம் கொதிக்கவிடாமல் இருக்கவேண்டும்.
தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியும் வெங்காயத்துடன் சேர்த்து வதக்கலாம். ஆனால், அது கிரீமி டெக்ச்சர் வராது என்பதால் தக்காளியை அரைத்து சேர்ப்பது நல்லது.
பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கலாம் என்றாலும் நீளமாக கீறி சேர்ப்பது ருசியைக் கூட்டித்தரும்.
ஸ்டவ்வை மீடியம் ஃப்ளேமில் வைத்து குருமா செய்வது மசாலாவில் காய் நன்றாக கலந்து அடிபிடிக்காமல் மிதமான தீயில் வேகுவதால்குருமா நல்ல ருசியைத்தரும்.