
பிரண்டை தொக்கு:
இளம் பிரண்டை கால் கிலோ
சின்ன வெங்காயம் 100 கிராம்
பூண்டு 50 கிராம்
வர மிளகாய் 15
உப்பு தேவையானது
புளி எலுமிச்சை அளவு
வெல்லம் சிறு கட்டி
பெருங்காயத்தூள்
நல்லெண்ணெய் அரை கப் தாளிக்க கடுகு, வெந்தயத்தூள், கருவேப்பிலை
பிரண்டை நறுக்கும் பொழுது கையில் பட்டால் அரிக்கும். எனவே அவற்றை சுத்தம் செய்யும்பொழுது கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு தோல் சீவி, கழுவி சிறு சிறு துண்டகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம் பூண்டு போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் எடுத்து தனியே வைக்கவும். பிறகு பிரண்டையை போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். மிளகாய் மற்றும் புளியையும் சேர்த்து நன்கு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் சிறிது நேரம் ஆறவிட்டு தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணையை விட்டு கடுகு, வெந்தயத்தூள் 1/2 ஸ்பூன், கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு அடுப்பை நிதானமாக வைத்து கிளறவும். பெருங்காயத்தூள் பொடித்த வெல்லம் சிறிது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறவும்.
ஆரோக்கியமான சுவைமிக்க பிரண்டை தொக்கு தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
கையேந்தி பவன் காரச் சட்னி:
எவ்வளவுதான் பெரிய பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் கையேந்தி பவனில் (சாலையோர உணவகங்கள்) கிடைக்கும் சட்னியை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. அம்புட்டு ருசியாக இருக்கும்.
தக்காளி 2
பெரிய வெங்காயம் 1
பூண்டு ஐந்தாறு
மிளகாய் 4
புளி சிறிய எலுமிச்சையளவு
உப்பு தேவையானது
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை எண்ணெய் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் போட்டு சிவக்க வறுத்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து தேவையான உப்பு, புளியையும் போட்டு நன்கு வதக்கவும். தக்காளி மென்மையாக வதங்கியதும் சிறிதுநேரம் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள சட்டினியுடன் கலந்து பரிமாற சுவையான ரோட்டுக்கடை கார சட்னி தயார்.