

தெலுங்கானா மற்றும் ஹைதராபாத் பிராந்தியத்தில் திருமணங்கள் மற்றும் விழாக்களில் இந்த சாதம் ஒரு பிரபலமான உணவாகும். இந்த உணவுடன் பகாரா பைங்கன் அல்லது தால்ச்சா போன்ற காரமான கறிகளும் சூப்பராக ஜோடி சேரும். இதில் காய்கறிகள் மசாலா சேர்ப்பது அவசியமில்லை என்பதால் சட்டென்று செய்து பரிமாற முடியும்.
சோயா பீன்ஸ் மற்றும் பன்னீர் சேர்த்தும் இதன் சுவையைக் கூட்டலாம். அப்படி காய்கறிகள் சேர்ப்பதாக இருந்தால் அதனுடன் மசாலாக்கள் கலந்து சேர்த்து சுவையைக் கூட்டலாம். அது அவரவர் விருப்பம்.
அரிசியை முழு மசாலா பொருட்கள், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து சமைப்பது இதன் முக்கிய பகுதியாகும்.
இதில் சேர்த்து இருக்கும் மசாலா பொருட்கள் எளிதில் ஜீரணிக்க கூடிய தன்மை உடையது என்பதால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கக் கூடிய உணவாக இது இருக்கிறது. சுவையும் அபாரம் என்பதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்கள் விரும்பி உண்ணுகின்றார்கள்.
பரிமாறும் பொழுது அவரவர் குடும்பத்திற்கு தகுந்த பிடித்தமான கிரேவி அல்லது சால்னாவுடன் சேர்த்து பரிமாறி அசத்தலாம். இதெல்லாம் அவரவர் சாய்ஸ்.
மொத்தத்தில் பகாராரைசை அதன் அடிப்படைத் தன்மை மாறாமல், நம் கற்பனைக்கு தகுந்தவாறு ருசியை கூட்டி பண்டிகை, விழாக்காலங்கள் அனைத்திலும் அனைவருக்கும் பிடித்த மாதிரி செய்து கொடுத்து நற்பெயரை பெறலாம். சாப்பிட்டவர்களும் ஆஹா... ஓஹோ என்று வாழ்த்தி, சந்தோசம் அடைவார்கள்.
ரெசிபியின் செய்முறை:
செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி -1கப்
வெங்காயம்-1
தக்காளி-1
பச்சை மிளகாய் -3
இஞ்சி, பூண்டு விழுது-1டீஸ்பூன்
நெய், எண்ணெய் தலா-1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை, புதினா- கைப்பிடி அளவு
உப்பு- ருசிக்கேற்ப
தாளிக்க தேவையானவை:
பட்டை, ஏலம், கிராம்பு, மராட்டி மொக்கு, ஜாதிப்பத்ரி, அன்னாசிப் பூ, கடல்பாசி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அது பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு வதக்கவும்.
பின்னர் தக்காளி, முனையில் கீறிய பச்சை மிளகாய் அனைத்தையும் தாளிதத்தோடு நன்றாக சேர்த்து வதக்கி புதினா நறுக்கிய தனியா போன்றவற்றையும் சேர்த்து வதக்கி, பாஸ்மதி அரிசி கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து பத்து நிமிடம் மூடி வேகவைக்கவும். மூடியை திறந்து பார்த்து தேவையானால் இன்னும் ஒரு ஐந்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும். சுவையான தெலுங்கானா பகாரா ரைஸ் ரெடி. விருப்பப்பட்ட கிரேவியுடன் சேர்த்து சாப்பிடலாம்.