கீரைகள் என்றால் பல கீரை வகைகள் நினைவுக்கு வரலாம். ஆனால், இந்த முளைக்கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?
வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்களை அள்ளித் தரும் முளைக்கீரையின் சிறப்புகளையும், அதை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சுவையான ரெசிபிகளையும் இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
முளைக்கீரையின் ஆரோக்கிய நன்மைகள்:
முளைக்கீரையில் (Mulaikeerai) உள்ள சத்துக்கள் ஏராளம். குறிப்பாக, இதில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன.
கால்சியம்
கால்சியம் சத்தானது நம் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு மிகவும் இன்றியமையாதது. 100 கிராம் முளைக்கீரையில் சுமார் 397 மி.கி கால்சியம் சத்து உள்ளது. இது பசலைக்கீரையை விட மிக அதிகம்.
முளைக்கீரையில் கால்சியத்துடன், வைட்டமின் 'ஏ' மற்றும் 'சி' போன்ற வைட்டமின்களும் உள்ளன. இந்த வைட்டமின்கள் கால்சியத்தை உடல் எளிதில் உறிஞ்சிக் கொள்ள உதவுகின்றன. இது எலும்பு மற்றும் பல் வளர்ச்சியைத் தூண்டி, வளரும் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கச் செய்கிறது.
இரும்புச்சத்து
இரத்த சோகை வராமல் தடுக்க இரும்புச்சத்து மிக அவசியம். இது சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்து, உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது.
100 கிராம் முளைக்கீரையில் சுமார் 22.9 மி.கி இரும்புச்சத்து உள்ளது. இது இரத்தத்தைச் சுத்திகரிக்கவும், இரத்த சோகையைப் போக்கவும் வல்லது.
இரும்புச்சத்து மற்றும் தாமிரச்சத்து இரண்டும் இணைந்து இரத்தத்தை மேம்படுத்துகின்றன. மேலும், முளைக்கீரையில் உள்ள பாஸ்பரஸ் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இதனால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும்.
முளைக்கீரையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது, மேலும் பசியைத் தூண்டும் தன்மையையும் கொண்டுள்ளது. வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் ஒரே கீரையில் கிடைப்பதால், இதை ஊட்டச்சத்தின் புதையல் என்றே கூறலாம்.
குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் 3 முளைக்கீரை ரெசிபிகள்
குழந்தைகளுக்கு கீரை என்றாலே பிடிக்காதுதான். அவர்களுக்கு பிடிக்கும் வகையில் செய்துகொடுத்தால் சீக்கிரம் காலியாகிவிடும். அதோடு ஊட்டச்சத்துகளையும் முழுமையாக பெறலாம்.
1. முளைக்கீரை புலாவ்
கீரைப் பிடிக்காத குழந்தைகளுக்கு புலாவ் சரியான தேர்வு. ஏனெனில், சாதத்தில் கீரை கலந்திருப்பதை குழந்தைகள் அறியாமல் சாப்பிடுவார்கள்.
செய்முறை:
பொடியாக நறுக்கிய முளைக்கீரையை, இஞ்சி-பூண்டு விழுது மற்றும் வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதை வடித்த சாதத்துடன் கலந்து, சிறிது நெய் சேர்த்துப் பரிமாறினால், சுவையான கீரை புலாவ் தயார். இதில் முந்திரி, கேரட் போன்றவற்றைச் சேர்த்தால் கூடுதல் ருசியாக இருக்கும்.
2. முளைக்கீரை பக்கோடா
செய்முறை:
முளைக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, சிறிது மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து தண்ணீர் தெளிக்காமல் பிசறவும். இதை எண்ணெயில் உதிர்த்துப் பக்கோடாவாகப் பொரித்து எடுக்கலாம் அல்லது கட்லெட் வடிவத்தில் செய்து சுட்டுக் கொடுக்கலாம்.
3. முளைக்கீரை அடை
காலை உணவாகவோ அல்லது மாலை சிற்றுண்டியாகவோ இதைக் கொடுக்கலாம்.
செய்முறை: முளைக்கீரையை பொடிப்பொடியாக நறுக்கி, லேசாக வதக்கிக் கொள்ளவும். இந்த கீரையை தோசை மாவிலோ அல்லது அடை மாவிலோ (மிளகு, சீரகம் சேர்த்து) கலந்து, அடையாக் சுட்டுக் கொடுக்கலாம். கீரையின் வாசம் தெரியாததால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
இந்த எளிய ரெசிபிகளை செய்துக்கொடுத்து சுவையான சத்தான உணவுகளைப் பரிமாறி மகிழுங்கள்.