இது செட்டி நாட்டு ஸ்பெஷல்!

இது செட்டி நாட்டு ஸ்பெஷல்!

வற்றல் குழம்பு!

வெயிலை வீணடிக்கலாமா? மலிவாகக் கிடைக்கும் சில காய்களை வற்றலாகப் போட்டு வைத்துக்கொண்டால் பல சமயங்களில் குழம்பு, சாம்பாருக்குக் கைகொடுக்கும்.

அவரை வற்றல், கத்தரி வற்றல், மாங்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போன்றவை மிக அருமையான சுவைகொடுக்கும் வற்றல் வகைகள், மாவற்றல் தவிர்த்து மேற்படி காய்களை, உப்புப் போட்டு வேகவைத்து வெயிலில் ஐந்தாறு நாட்கள் காயவைத்து, எடுத்து வைக்கவும். கிளிமூக்கு மாங்காய் (கோமாங்காய்) அரைப்பழமாகப் பார்த்து வாங்கி, அரிந்து உப்பு போட்டு கையால் நன்கு பிசறிவிட்டு வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும். இப்போது நமக்குத் தேவையான வற்றல்  தயார். இதை வருடம் முழுக்கப் பயன்படுத்தி சுவைக்கலாம்!

கத்தரி வற்றல் குழம்பு

தேவையான பொருட்கள்: கத்தரி வற்றல் – 10, மாங்காய் வற்றல் – 10, அவரை வற்றல் – 10, உருளைக் கிழங்கு – 1, துவரம் பருப்பு – ½ தம்ளர், பெரிய பெருங்காயம் (நறுக்கியது) – 1, சாம்பார் தூள் – 3 மேஜைக்கரண்டி, உப்பு, புளி – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிது, கடுகு – 1 தேக்கரண்டி, தாளிக்க – சிறிது எண்ணெய்.

வறுத்து அரைக்க: தேங்காய் – ½ மூடி, வரமிளகாய் – 4, சோம்பு – 1, தேக்கரண்டி, முந்திரிப் பருப்பு – 4 கசகசா – 1 தேக்கரண்டி , வெள்ளை ரவை – 2 தேக்கரண்டி, பூண்டு தோலுடன் – 4 பல்.

மேற்கூறியவற்றை ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி வாசம் வரும் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடி செய்து பின் தேவையான நீரூற்றி நைஸாக அரைக்கவும்.

செய்முறை: வெந்த துவரம் பருப்புடன், வற்றல்கள், உருளைக் கிழங்கு சேர்த்து நீரூற்றி வேகவிடவும். மாங்காய் வற்றலைத் தனியாக வேகவைத்து உப்பு நீரை வடித்து விடவும். வெந்த வற்றல்களுடன் மா வற்றலையும் சேர்த்து உப்பு, புளி, சாம்பார் தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் மிக்ஸியில் அரைத்த விழுதைச் சேர்க்கவும். நன்றாகக் கொதிக்கத் தொடங்கியதும் சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் விட, சுவையான வற்றல் குழம்பு தயார்!

பச்சை சுண்டைக்காய் வத்தல் குழம்பு!

தேவையான பொருட்கள்: பச்சை சுண்டைக்காய் இரண்டாக நறுக்கியது – 1 கப், நறுக்கிய பெரிய வெங்காயம் – ½ கப், நறுக்கிய பூண்டு பற்கள் – ¼ கப், சாம்பார் தூள் – 4 மேஜைக்கரண்டி, தக்காளி – 3, வெல்லம் – சிறிது, கடுகு – 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி, பெருங்காயம் – சிறிது, நல்லெண்ணெய் – ¼ கப்.

செய்முறை: ஒரு வாணலியில் கால் கிண்ணம் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அதில் சுண்டைக்காயைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வெள்ளை நிறமாகும் வரை வதக்கவும். நன்கு வதங்கியதும் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு, புளி, சாம்பார் தூள் போட்டுக் கொதிக்க விடவும். கெட்டியாகி, எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்ததும் இறக்கிவிடவும்.

சிறிது வெல்லம் சேர்த்துக் கிளறி விட, ஒரு வாரம் வரை இந்தக் குழம்பு நன்றாக இருக்கும். டூர், விடுமுறை நாட்களுக்குக் கை கொடுக்கும் அருமையான குழம்பு இது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com