பாரம்பரிய ஓணம் பண்டிகை ஸ்பெஷல் பாயசம்!
நம் அண்டை மாநில கேரள மக்களின் முக்கியமான பண்டிகை ஓணம். பூமிக்கு உள்ளே இருக்கும் மகாபலி என்ற அரசன் வருடத்தில் ஒருநாள் மட்டும்தான் ஆண்டு வந்த மண்ணின் மக்களைக் காண பூமிக்கு மேலே வரும் நாளே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊர் முழுக்க கண்ணைக் கவரும் வண்ண வண்ணப் பூக்களால் ரங்கோலி வரைந்து, கதகளி உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் ஆடி குதூகலிப்பர்.
அனைவர் வீடுகளிலும் விதவிதமான சுவைகளில் 'ஓண சத்யா' எனப்படும் விருந்து சமைத்து உண்டு மகிழ்வர். அந்த விருந்தில் கடைசி அயிட்டமாக பரிமாறப்படுவது இணையற்ற சுவையும் மணமும் கொண்ட பாயசம்! இந்தப் பாயசத்தின் சுவை சிறிதும் குறையாமல் இருக்க, அதை தயாரிக்கும்போது கவனம் சிதறாமல், எந்த தவறும் ஏற்படாமல் பார்ப்பது அதிக முக்கியம். இந்தப் பதிவில் கூறப்பட்டிருக்கும் 6 தவறுகளை தவிர்த்தால் ஒரு டெலிஷியஸ் டெஸ்ஸர்ட் கிடைக்கும். அந்த 6 தவறுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.
1. பாயசத்திற்கு உபயோகிக்கும் அட (அட என்பது அட பிரதமன் செய்வதற்கு உபயோகிப்பது), அரிசி, பருப்பு போன்றவற்றை மென்மைத் தன்மை அடையும் வரை குக் பண்ணினால் போதும். அதனுடன் பால் சேர்க்கும்போது மேலும் சிறிது நேரம் குக் ஆகும் வாய்ப்புண்டு. அதிக நேரம் வெந்தால் அதன் டெக்ச்சர் மாறி கொழ கொழப்பாகி விடும்.
2. பாலை சிறு தீயில் வைத்து அடிக்கடி கிளறி விடவேண்டும். இல்லையென்றால் பாத்திரத்தின் அடியில் பால் தீய்ந்து ஒட்டிக்கொள்ளும். தீய்ந்த வாசனை பாயசம் முழுக்க பரவி மொத்த டேஸ்ட்டையும் கெடுத்துவிடும்.
3. பாத்திரத்தின் அடியில் பாயசம் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க அடி கனத்த பாத்திரத்தை உபயோகிப்பது நல்லது. பாத்திரத்தின் அடியில் முன் கூட்டியே சிறிது நெய் தடவி சிறிது சூடேறிய பின் மற்ற பொருள்களை சேர்க்கலாம். சிறு தீயில் வைத்து அடிக்கடி கிளறிவிட்டால் அடிப்பிடிப்பதை தவிர்க்கலாம். குக்கிங் பான் அருகில் வேறு பல பாத்திரங்களை வைத்து கூட்டம் சேர்க்காமல் பாயச பாத்திரத்தை மட்டும் அடுப்பில் ஏற்றி இடையூறின்றி சமைக்கவும்.
4. பாயசத்தில் சர்க்கரை சேர்க்கும்போது சர்க்கரையை மொத்தமாகப் போட்டுவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அது கரைந்ததும் டேஸ்ட் பண்ணிப் பார்த்து தேவைப்பட்டால் மேலும் கொஞ்சம் சேர்க்கலாம் அல்லது நிறுத்திக் கொள்ளலாம். இப்படி செய்வது சரியான அளவு இனிப்புக்கு உத்திரவாதம் அளிக்கும்.
5. பாயசம் ரொம்ப திக் ஆகிவிடாமல் சிறிது நீர்த்த தன்மையுடன் இருக்கும்போதே அடுப்பிலிருந்து இறக்கி விடவும். ஏனெனில் பாயசத்தில் சூடு குறைந்து குளிர்ச்சி அடையும்போது மேலும் கொஞ்சம் கெட்டிப்பட்டுவிடும்.
6. பாயசத்தில் குங்குமப் பூ, ஏலக்காய் போன்ற ஸ்பைஸஸ்களை குக்கிங் புராஸஸ் முடிவடையும் தருவாயில் சேர்ப்பது அவற்றின் சுவையையும் வாசனையையும் பாயசத்தில் நன்கு உணர்ந்து ருசிக்க உதவும். முன்னதாகவே சேர்த்தால் பாயசத்துடன் சேர்ந்து அவையும் நன்கு குக் ஆகி தன் சுவையையும், வாசனையையும் இழந்துவிட நேரிடும்.
மேலே கூறிய 6 தவறுகளையும் தவிர்த்து கவனத்துடன் பாயசம் செய்தால் ஓண சத்யா ஒரு டெலிஷியஸ் சத்யாவாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.