இந்த மழைக்காலத்தில் பொதுவாக அனைவரும் பாதிக்கப்படுவது சளித் தொந்திரவினால்தான். அதிலும் குழந்தைகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். என்னதான் பார்த்துப் பார்த்து தந்தாலும் சளி பிடிக்கும் போது ஆங்கில மருந்துகளை நாடாமல் எதைத் தந்தால் நிவாரணம் கிடைக்கும் என்று தடுமாறுவோம். இதோ எளிதாக கிடைக்கும் இந்த அற்புத இலைகள் நமது கவலையைத் தீர்க்கும் பக்க விளைவுகள் அற்ற மருந்தாகிறது. ஆம் எளிதான துளசி& கற்பூரவல்லி சர்பத் செய்து வைத்துக் கொண்டு ஆரம்ப சளியை குணப்படுத்தலாம்.
தேவையானவை:
துளசி இலைகள்- இரண்டு கப்
சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு -
100 கிராம்
செய்முறை:
துளசி இலைகளை மண் போக நன்கு கழுவி சிறிது தண்ணீர் விட்டு மின் அம்மியில் மைய அரைத்துக் கொள்ளவும். அதனுடன் அரை கப் தண்ணீர் விட்டு கலந்து சுத்தமான வெள்ளை துணியில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும் வடிகட்டின சாற்றுடன் பொடித்த சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு கலந்து அடுப்பில் வைத்து கிளறி கம்பி பாகு வரும்போது இறக்கவும். ஜூஸ் ஆறியதும் சுத்தமான ஜாரில் எடுத்து வைக்கவும் . தேவையானபோது கால் டம்ளர் ஜூஸ் சிறப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து பருகலாம். சளிக்கு இதமான ஆரோக்கிய சர்பத் இது.
இதையே பாதி துளசியும் பாதி ஓமவல்லி இலை எனப்படும் கற்பூரவல்லி இலைகளும் போட்டு சாறு எடுத்து மேலே சொன்னது போல செய்து வைத்துக் கொள்ளலாம். இது ஜலதோஷத்துடன் ஜீரணத்துக்கும் நல்லது. ஒரு வயதுக் குழந்தை தவிர்த்து சிறு குழந்தைகளுக்கு கூட ஒரு ஸ்பூன் சர்பத் ஒரு ஸ்பூன் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொடுக்கலாம்.