பக்காவா செய்யலாம் துருக்கியின் ஸ்பெஷல் ஸ்வீட் பக்லாவா..!

பக்லாவா...
பக்லாவா...pixabay.com

துருக்கியில் மிகவும் பிரபலமான பக்லாவா லேயர் லேயராக செய்யப்படும் இனிப்பு வகையாகும். இது இந்தியாவில் ஹைதராபாத்தில் மிகவும் பிரபலம். அத்தகைய பக்லாவாவை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

மைதா- 2 ½ கப்.

உப்பு- 1 சிட்டிகை.

எழுமிச்சை சாறு-1 தேக்கரண்டி.

பாதாம்-50கிராம்.

பிஸ்தா-50கிராம்.

வெண்ணெய்-125கிராம்.

சர்க்கரை பாகு செய்வதற்கு,

சர்க்கரை-1 1/4கப்.

தண்ணீர்- 1 ¼ கப்.

எழுமிச்சை சாறு-1 தேக்கரண்டி.

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பவுலில் 2 1/2கப் மைதா மாவு, 1 சிட்டிகை உப்பு, 1 தேக்கரண்டி எழுமிச்சை சாறு கடைசியாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவு தயார் ஆன பிறகு அதன் மீது சிறிது எண்ணெய் தடவி துணி போட்டு மூடி வைக்கவும்.

அடுத்து மிக்ஸியில் 50 கிராம் பாதாம், 50 கிராம் பிஸ்தாவை சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு ஃபேனில் 125கிராம் வெண்ணெய்யை நன்றாக உருக்கி வைத்து கொள்ளவும்.

இப்போது மாவை 20 முதல் 22 உருண்டைகளாக பிரித்து கொள்ளவும். சோளமாவை தூவி அதில் இப்போது உருண்டையை சப்பாத்தி மாவு போல நன்றாக விரித்து கொள்ளவும். இப்படியே 22 உருண்டைகளையும் விரித்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது உருக்கி வைத்திருக்கும் வெண்ணெயை தட்டில் தடவிக்கொண்டு அதன் மேல் மெலிதாக விரித்து வைத்திருக்கும் மாவை வைக்கவும். பிறகு அந்த மாவின் மீது வெண்ணெய் தடவி அடுத்து விரித்து வைத்திருக்கும் மாவை வைக்கவும். இப்படி ஒவ்வொரு லேயருக்கு நடுவிலுமே வெண்ணெய் தடவி அடுத்தடுத்து மாவை வைக்கவும். இது போன்று 11 மாவை விரித்து வைத்து இப்போது அரைத்து வைத்திருக்கும் நட்ஸை அதன் மீது தூவவும். இப்போது மீதி பரப்பி வைத்திருக்கும் 11 மாவு சீட்ஸையும் ஒன்றன் மீது ஒன்றாக வெண்ணெய் தடவி அடுக்க வேண்டும்.

இப்போது அடுக்கி முடித்ததும் மாவை விரும்பிய வடிவத்தில் கட் செய்து கொள்ளவும். சதுரமாகவோ அல்லது டையமண்ட் வடிவத்திலோ கத்தியை வைத்து நன்றாக வெட்டிய பிறகு மீதி இருக்கும் வெண்ணெயை அதன் மீது ஊற்றவும். இப்போது அவனில் 175°C ல்  55 நிமிடம் வைத்து எடுக்கவும். மாவின் மேலே கோல்டன் பிரவுன் நிறம் வந்திருக்கும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 ¼ கப் சர்க்கரையை எடுத்து கொண்டு அத்துடன் 1 ¼ கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இதனுடன் 1 தேக்கரண்டி எழுமிச்சைசாறு சேர்க்கவும். சர்க்கரை பாகு சிரப் பதத்திற்கு வந்தால் போதுமானது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

இப்போது அவனில் செய்து வைத்திருக்கும் பக்லாவை வெளியிலே எடுத்து வைத்து அதன் மீது சர்க்கரை சிரப்பை ஊற்றவும். பிறகு பவுடர் செய்து வைத்திருந்த நட்ஸை அதன் மீது தூவவும். அவ்வளவுதான்  இப்போது சுவையான பக்லாவா தயார். மிகவும் பிரபலமான இந்த இனிப்பு வகை செய்வது ரொம்ப சுலபம். வீட்டிலேயே ஒருமுறை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com