எவ்வளவுதான் கஷ்டப்பட்டு பலவித ஐட்டங்களை தயார் செய்தாலும் ஏதோ ஒன்று குறைந்தது போன்ற உணர்வும், இன்னும் சுவையாக செய்திருக்கலாமே!? என்றுதான் தோன்றும். டைனிங் டேபிளின் மீது நாம் தயாரித்த ஐட்டங்களை அழகாக டிஸ்பிளே செய்து பாருங்களேன்.
‘அட, இன்னைக்கு புதுசா இருக்கே?’ என்று எல்லோரும் கேட்டுக்கொண்டே, டைனிங் டேபிளுக்கு ஆஜராகி விடுவார்கள்.
ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்குச் சென்றால், அவர்கள் டிஸ்ப்ளே செய்து வைத்திருக்கும் விதத்தைப் பார்த்ததும், ஏதோ புதிய ஐட்டம் என்று நினைத்து கேட்டால், நாம் வழக்கமாக செய்யும் கீரை மசியலாக இருக்கும்! அதை டேபிளின் மீது வைக்கும் விதம்தான் அழகு. நாமும் கீரை மசியலின் நடுவே ஒரு வெங்காயத் துண்டை, நமக்குப் பிடித்த டிசைனில் நறுக்கி வைக்கலாமே!
உங்கள் கற்பனைக்கு ஏற்ப, நாம் வழக்கமாக செய்யும் உணவின் மீதே, உடலுக்குச் சத்தான பச்சைக் காய்கறிகளை கொண்டே, அழகுபடுத்தலாம். இதனால் பார்த்தமாத்திரத்தில், எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும் என்ற ஆதங்கம் ஏற்படும். இதனால் பச்சைக் காய்கறிகளும், வயிற்றுக்குள் ‘மளமள’வென சென்று புதுதெம்பைக் கொடுக்கும். உடம்பிற்கும் நல்லது.
டிபன் ஐட்டங்களைப் பரிமாறும்போதும், டிஸ்ப்ளே மிக மிக அவசியம். வழக்கமான இட்லியாக இருந்தாலும், தட்டில் வைத்துக் கொடுக்கும்போது, அதன் மீது மிளகாய்ப் பொடி, எண்ணெய் கலந்த கலவையை அழகாக வட்டமாக ஊற்றிக் கொடுங்கள். ஒரு இட்லியின் மீது தக்காளி, சட்னியை வையுங்கள். மற்றொன்றின் மீது நெய் ஒரு ஸ்பூனை தடவுங்கள். மூன்றையும் ஒரே தட்டில் வைத்துத்தான் பாருங்களேன். சுடச்சுட இட்லி ஸ்வாஹா ஆகிக்கொண்டே இருக்கும்.
ஐஸ்க்ரீம் செய்தால், அதன் மீது இரண்டு வேஃபர்சை வைத்துப் பிறகு கொடுங்கள். அட, இதுக்காக வேஃபர்ஸுக்கு எங்கே போவது, அதையும் வாங்க வேண்டுமா? என்று யோசித்தால், வீட்டில் உள்ள பிஸ்கட் இரண்டை எடுத்து, ஐஸ்கிரீமின் மீது குத்தி வையுங்கள். ‘பொம்மை பிஸ்கட்’ இருந்தால், வாத்து, மீன் போன்ற வடிவ பிஸ்கெட்டுகளை ஐஸ் கப்பில் குத்திக் கொடுங்கள். ஆஹா... சூப்பரோ சூப்பர் என்று ஐஸ்கிரீமை சாப்பிடும் முன்பே பாராட்டுப் பெறுவீர்கள்.
அது போன்று குளிர்பானங்கள் தயாரித்து கண்ணாடி தம்ளரில் வைத்துக் கொடுக்கும்போது, ஒரு துண்டு (வட்ட வடிவ) கேரட்/ எலுமிச்சம் பழத்துண்டு, சாத்துக்குடி, ஆப்பிள் போன்ற ஏதாவது ஒரு பழத்தை தம்ளரின் விளிம்பில் குத்திக் கொடுங்களேன். சுவையே தனி!
இதுபோன்று, கலவை சாதங்களை செய்யும்போதும், அதன் நடுவே ஒரு கருவேப்பிலைக் கொத்தை சொருகி, செடி போல் வையுங்கள். அல்லது அதன் மேல் நான்கு ஐந்து வடகம் / வறவல் போன்றவற்றைச் சுற்றி அழகுபடுத்துங்கள். ஏன் அலுவலகம் / பள்ளிக்குக் கொடுத்தனுப்பும் உணவுப் பொருட்களின் மீதும், இதுபோன்ற காய்கறி, பிஸ்கெட், மிளகாய், சுண்டல் போன்றவற்றால் அழகுபடுத்தலாம்.
தயிர் சாதம் பிசைந்து டேபிளின் மீது வைக்கும்போது, அதன் மீது வளைந்த வறுத்த தயிர் மிளகாயை அப்படியும், இப்படியுமாக போடலாம். இரண்டு திராட்சைகளை கண் போல் வைத்து, வளைந்த மிளகாயை வாய் போலவும் வைக்கலாம்! பழைய தயிர் சாதமா இது என்று யாரும் கேட்க மாட்டார்கள்! ‘இன்னும் கொஞ்சம் இருக்கா?’ என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
விடுமுறை நாட்களில், உங்கள் டிஸ்ப்ளே திறனைக் காட்டி, வித்தியாசமான டின்னரை உங்கள் குடும்பத்தினருக்குக் கொடுக்கலாம். இதனால் நாம் செய்த உணவுகளும் வீணாகாது. பார்த்தவுடனே, சாப்பிடத் தோன்றும். ‘பார்த்தால் பசி தீரும்’ என்று சும்மாவா பாடினார்கள்!