ஊர் மணக்கும் குழம்பு வகைகள்!

ஊர் மணக்கும் குழம்பு வகைகள்!
Published on

புதுக்கோட்டை தக்காளி காய் காரக்குழம்பு

தேவை: தக்காளிக்காய் – ¼ கிலோ, நறுக்கிய தக்காளி – 2 கைப்பிடி, சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி, மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன், குழம்புப் பொடி – 3 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 1½ குழிக்கரண்டி.

தாளிக்க: கடுகு – 2 டீஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: நறுக்கிய தக்காளியை தண்ணீர் விடாமல் ஜூஸ் ஆக்கவும். தாளிப்பில் சின்ன வெங்காயம், தக்காளிக் காயைப் போட்டு வதக்கிய பின், தக்காளி ஜூஸை ஊற்றி கொதிக்க விடவும். MTR குழம்புப் பொடி, புளிக்கரைசல், உப்பு போட்டு நன்கு கொதித்த பின் இறக்கவும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் புளிக்காய்ச்சல்

தேவை: புளி – 1 ½ எலுமிச்சை அளவு, பெருங்காயம் – 1 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை – 1 கைப்பிடி, கடலைப் பருப்பு – 1 கைப்பிடி, குழம்புப் பொடி – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, நல்லெண்ணெய் – 2 குழிக்கரண்டி, மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்.

வறுத்துப் பொடியாக்க: தனியா – 2 கைப்பிடி, மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8.

தாளிக்க: கடுகு – 2 டீஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: தாளிப்பில் வேர்க்கடலையையும், கடலைப் பருப்பையும் சிவக்கும்வரை வறுக்கவும். கெட்டியாகப் புளியைக் கரைத்துவிட்டு, உப்பு, மஞ்சள் பொடி போட்டு, குழம்புப் பொடியைச் சேர்த்து கொதிக்கவிடவும். கெட்டியான பிறகு இறக்கவும். சாதம் கலக்கும்பொழுது வறுத்துப் பொடித்ததை சேர்த்துக்கொள்ளவும்.

கொடைக்கானல் பட்டர் பீன்ஸ் குழம்பு

தேவை: ஃபிரஷ் பட்டர் பீன்ஸ், உருளைக்கிழங்கு – தலா 100 கிராம், கத்திரிக்காய், நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா 2 கைப்பிடி, புளி – 1 எலுமிச்சை அளவு, குழம்புப் பொடி – 3 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன், வறுத்துப் பொடிக்க (மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன்).

தாளிக்க: கடுகு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, வெந்தயம் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, பச்சை மிளகாய் – 2.

செய்முறை: தாளிப்பில் வெங்காயம், தக்காளி, பட்டர் பீன்ஸ், உருளை, கத்திரிக்காய் ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து, உப்பு, குழம்புப் பொடி, உப்பு, மஞ்சள் பொடியைப் போடவும். குக்கரில் மூன்று விசில் வரும்வரை சமைக்கவும். இறக்கிய பின் வறுத்துப் பொடித்ததைச் சேர்க்கவும். இதை சைட் டிஷ் ஆகவும் பயன்படுத்தலாம்.

கிளியனூர் மசால் வடை குழம்பு

தேவை: கடலைப் பருப்பு – 1 ஆழாக்கு, சோம்பு – ½ டீஸ்பூன், புளி – 1, எலுமிச்சை அளவு, குழம்புப் பொடி – 3 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, மஞ்சள் பொடி, சின்ன வெங்காயம் – 3 கை, நறுக்கிய  தக்காளி – 2 கை, தேங்காய்த் துருவல் – ¼ மூடி, பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – தேவைக்கு.

தாளிக்க: கடுகு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, வெந்தயம் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, சோம்பு – ½ டீஸ்பூன்.

செய்முறை: ஒரு மணி நேரம் ஊறிய கடலைப் பருப்புடன், பாதி அளவு வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு, சோம்பு சேர்த்து கரகரப்பாக அடைத்த, வடையாகத் தட்டிக் கொள்ளவும். புளிக்கரைசலில், உப்பு, குழம்புப் பொடியைக் கலந்து, நன்றாகக் கொதிக்கும்பொழுது, தட்டிய வடைகளைப் போடவும். தேங்காயை அரைத்துவிட்டு சேர்ந்து கொதித்ததும் இறக்கி தாளிக்கவும்.

தென்காசி வாசுதேவ நல்லூர் பூண்டு குழம்பு

தேவை: மலைப்பூண்டு – 4 கைப்பிடி, சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி, தேங்காய்ப்பால் – ½ ஆழாக்கு, வெந்தயப் பொடி – 3 டீஸ்பூன், புளி – 1½ எலுமிச்சை அளவு, குழம்புப் பொடி – 3 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, நல்லெண்ணெய் – 2 குழிக்கரண்டி.

தாளிக்க: கடுகு – 2 டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4,  கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: தாளிப்பில் வெங்காயத்தை வதக்கி வெந்த பூண்டைச் சேர்த்து, குழம்புப் பொடி, வெந்தயப் பொடியைப் போட்டு வதக்கவும். புளியைக் கரைத்துவிட்டு, உப்பு போட்டு கொதிக்க விடவும். கெட்டியாகச் சேர்ந்து கொதித்த பிறகு தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com