உளுந்து ஒரு மிக ஆரோக்கியமான உணவாகும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும். அதிக உளுந்து உணவு உங்களின் ஆயுளை கெட்டியாக்கும் என்று சொல்வார்கள். உளுந்து அதிகம் சாப்பிட நம் எலும்பு, தசை என அனைத்தும் வலிமையாகும்.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் மிகவும் வலியை அனுபவிப்பார்கள். சிறுவயதில் அவர்களுக்கு உளுந்தங்களி கொடுப்பார்கள். ஏனென்றால் உளுந்துக்கு அவ்வளவு மகிமை உண்டு. நவீன காலத்தில் பெண்கள் களியை சுத்தமாக விரும்புவதில்லை. ஆனாலும் உடலை வலிமையாக வைத்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறார்கள். அவர்களுக்கே இந்த ஒரு சிறந்த ரெசிபி உளுந்து லட்டு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை லட்டு பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. அப்படி இந்த உளுந்தையும் லட்டுவாக செய்து சாப்பிட்டால் எளிதாக சாப்பிடமுடியும். பிடித்தவகையிலும் சாப்பிட முடியும்.
தேவையான பொருட்கள் :
முழு உளுந்து - 1 கப்
அரிசி - 2 ஸ்பூன்.
நெய் - 1 ஸ்பூன்.
முந்திரி பருப்பு - கால் கப்.
வெல்லம் - 3 ஸ்பூன்.
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்.
நெய் - 2 ஸ்பூன்.
செய்முறை :
முதலில், ஒரு கடாயில் நெய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும். இதையடுத்து, முழு உளுந்து, அரிசி இவற்றையும் எண்ணெய் இன்றி வறுத்து நன்கு ஆறவிடவும்.
இப்போது, வறுத்த முழு உளுந்து மற்றும் அரிசியை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.பின்பு இதனுடன் வெல்லம், ஏலக்காய் தூள் இவற்றையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வறுத்த முந்திரி, நெய் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது, கையில் நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டினால், சுவையான உளுந்து லட்டு தயார்.