
மோர் குழம்பு கேரளா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவாகும். இதை பலர் பலவிதமாக செய்தாலும் பருப்பு உருண்டைகள் பயன்படுத்தி மோர் குழம்பு செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இத்தகைய மோர் குழம்பு காரைக்குடியில் பிரபலமாகும். அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் சில பகுதிகளில் இத்தகைய மோர் குழம்பு செய்யப்படுகிறது. உங்களுக்கு மோர் குழம்பு அதிகம் பிடிக்கும் என்றால் இதை ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
தயிர் - 1 கப்
கடலைப்பருப்பு - ¼ கப்
மல்லித்தூள் - ½ ஸ்பூன்
சீரகம் - ½ ஸ்பூன்
தேங்காய் துருவல் - ¾ கப்
துவரம்பருப்பு - ½ கப்
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 3
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ½ ஸ்பூன்
செய்முறை:
முதலில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அதை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பெருங்காயத்தூள், மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் வைத்து பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
அடுத்ததாக கொத்தமல்லி விதை, கடுகு, சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை ஊற வைக்கவும். இதையும் மிக்ஸியில் போட்டு பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் சேர்த்து மோர் குழம்பிற்கு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள பருப்பு பேஸ்ட்டை கடாயில் சேர்த்து, அதனுடன் தயிரையும் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் வேக வைத்த பருப்பு உருண்டைகளை சேர்த்து ஐந்து நிமிடம் மேலும் கொதிக்க வைக்க வேண்டும்.
மோர் குழம்பு நன்கு கொதித்து பொங்கி வரும் வேளையில் சிறு கடாயில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் கொட்டினால், உருண்டை மோர் குழம்பு ரெடி.