வெங்காயத் தக்காளி குழம்பு
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்_1/4 கிலோ
பழுத்த தக்காளி _4
பச்சை மிளகாய் _5
இஞ்சி _1 துண்டு
செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வெங்காயத்தை போட்டு நன்றாக வதங்கியதும், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறிவிட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். ஆறியதும் தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு 2 திருகுதான் சுற்றி கொரகொரப் பாக எடுக்க வேண்டும். அரைத்த விழுதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி அத்துடன் காய் வெந்த நீரை ஊற்றி கலந்து குழம்பு பதத்திற்கு ஆக்கவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு குழம்பில் கலந்து கொள்ளவும். சூடான சாதத்தில் போட்டு சுடச்சுட சாப்பிட்டால் சுவை சும்மாவா விடும். முயற்சி செய்து பாருங்கள்
இதற்கு சைட் டிஷ் அப்பளம், கூழ் வடகம், கொத்தவரங்காய் வற்றல் பொரித்து சாப்பிட்டால் ஆஹா என்று சொல்லத் தோன்றும்.
மா வற்றல் குழம்பு
தேவையான பொருட்கள்:
வேகவைத்த மொச்சைக் கொட்டை _100 கிராம்
வேக வைத்த மா வற்றல் _100 கிராம்
பூண்டு _15 பற்கள்
உப்பு _தேவைக்கு
மிளகாய்த்தூள் _21/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் _1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் _4 ஸ்பூன்
வெல்லம் பொடி _1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் _4 ஸ்பூன்
கசகசா _1 ஸ்பூன்
செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு பூண்டு போட்டு வதக்கி, பின்னர் வேகவைத்த மொச்சை கொட்டையை போட்டு வதக்கி பிறகு புளித் தண்ணீரை ஊற்றி கொதித்ததும் மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து கலந்துவிட்டு பூண்டு வேகும் வரை கொதிக்க வைக்கவும். அதில் வேகவைத்த மா வற்றலை போட்டு வெல்லம் பொடி சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் தேங்காய், கசகசாவை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். குழம்பு கொதித்து வற்றும் வேளையில் அரைத்தக் கலவையை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வற்ற விடவும். பின்னர் தாளிப்பு கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், ஒரு வற்றல், கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் கொட்டவும்.
மணத்தக்காளி தண்ணிச்சாறு
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை _1 கட்டு
மிளகுப்பொடி _1/4 ஸ்பூன்
சீரகப்பொடி _ 1/4 ஸ்பூன்
முழு சீரகம் 1/4 ஸ்பூன்
அரிசி கழுவிய தண்ணீரில் இரண்டாவது தண்ணீர் _ குழம்பு க்கு தேவையான அளவு.
சின்ன வெங்காயம் _50 கிராம்
தேங்காய் துருவல் _ 1மூடி
செய்முறை: முதலில் கீரையை சுத்தப்படுத்தி கழுவி எடுத்து வைக்கவும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் அரிசி கழுவிய நீரை விட்டு அத்துடன் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு மிளகுப்பொடி, சீரகப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதே நேரம் தேங்காயுடன் சீரகத்தைப் போட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் முக்கால்வாசி வெந்தவுடன் அதில் கீரையை போட்டு வேகவிடவும். கீரை கொதித்து வெந்ததும் தேங்காய் அரைத்த கலவையை ஊற்றி கலக்கி உடனே இறக்கி விடலாம். இதை தனியாகவே குடிக்கலாம். வாய்புண், வயிற்றுப்புண் குணமாகும்.