சுலபமான முறையில் விதவிதமான மஞ்சூரியன் செய்முறை!

Manchurian recipes!
variety of Manchurian recipes!
Published on

பேபிகார்ன் மஞ்சூரியன்

தேவை:

பேபிகார்ன் - 15

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1கப்

தக்காளி சாஸ்,

சோயா சாஸ், 

ரெட் சில்லி சாஸ் - தலா 2 டீஸ்பூன் 

வெங்காயத்தாள் - சிறிது 

குடைமிளகாய் -1 கப்

பச்சை மிளகாய் - 4 நறுக்கியது

உப்பு - தேவையான அளவு 

மிளகாய் தூள்,

சீரகத்தூள், 

கேசரிப்பவுடர் - சிறிதளவு 

செய்முறை:

முதலில் பேபிகார்னை நீளவாக்கில் வெட்டி, கொதிக்கும் நீரில் 5 நிமிடம் கொள்ளவும். பேபிகார்னில் உப்பு, மிளகாய் தூள் , சீரக தூள் ஆகியவற்றைப் போட்டு பிரட்டிக் கொள்ளவும். பிறகு அதை எண்ணையில் போட்டுப் பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வெங்காயம், சாஸ் வகைகளை ஊற்றி, சிறிது உப்பு, சர்க்கரை வெங்காயத்தாள், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி, கடைசியாக பொரித்த பேபிகார்னை சேர்த்து பிரட்டி இறக்கவும். சுவையான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெடி.

பிரெட் மஞ்சூரியன்

தேவை:

பிரெட் - 4 துண்டுகள்

வெண்ணெய் - 2 டீஸ்பூன் 

வெங்காயம் - 2

குடைமிளகாய் - 1

பச்சை மிளகாய் - 2

சில்லி சாஸ் - 2 டீஸ்பூன் 

டொமேடோ சாச் - 1/2 கப்

சோயா சாஸ் - 1 டீஸ்பூன் 

உப்பு - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

பிரெட் துண்டுகளை தவாவில் வெண்ணெய் விட்டு சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். பின் அவற்றை சிறு சிறு துண்டுகளாக கட் செய்துகொள்ளுங்கள்.

கடாய் வைத்து வெண்ணெய்  விட்டு வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வதங்கியதும் அதில் டொமேடோ சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ், கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்குங்கள். 

மசாலா நன்கு கலந்ததும் பிரெட் துண்டுகளை சேருங்கள். பிரெட் துண்டுகள் உடையாதவாறு மசாலா சேருமாறு பிரட்டுங்கள். பிரெட் மசாலாவில் ஊறி நல்ல சுவையில் வரும் போது கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள்.சுவையான பிரெட் சில்லி மஞ்சூரியன் தயார்.

இதையும் படியுங்கள்:
ருசியான விதவிதமான பகாளாபாத் ரெசிபிகள்!
Manchurian recipes!

இட்லி மஞ்சூரியன்

தேவை:

இட்லி - 4

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - சிறிய துண்டு 

பூண்டு பற்கள் - 4

தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன் 

சோயா சாஸ் - 1 டீஸ்பூன் 

மல்லித்தழை - சிறிது 

எண்ணெய் - 4 டீஸ்பூன் 

உப்பு - சிறிது.

செய்முறை:

இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மல்லித்தழை எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

தக்காளி சாஸ், சோயா சாஸ் இரண்டையும் சேர்த்து கலக்கி ஒரு பௌலில் வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

பச்சை வாடை போனதும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறி பிறகு அதனுடன் வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.

கேரட் மஞ்சூரியன்

தேவை:

கேரட் - 1/4 கிலோ (வட்டமாக நறுக்கியது), 

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், 

பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது), 

வெங்காயம் - 1 (நறுக்கியது),

குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது), தக்காளி சாறு - 5 டீஸ்பூன் சில்லி சாஸ், சோயா சாஸ் - தலா 1/2 டீஸ்பூன்,

சோள மாவு - 1 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது), உப்பு - தேவையான அளவு ,

எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

மாவிற்கு...

மைதா மாவு - 1/4 கப், 

சோள மாவு - 3 டீஸ்பூன்,

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், 

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்,

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
பாட்டி காலத்து கைமணம்: மணத்தக்காளி கீரை தண்ணிச்சாறு செய்முறை!
Manchurian recipes!

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கேரட் துண்டுகளை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளிசாறு, சோயா மற்றும் சில்லி சாஸ் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

அடுத்து ஒரு கப்பில் சோள மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொண்டு, அதனை வாணலியில் ஊற்றி, ஒரு கொதி விட்டு, பின் வறுத்து வைத்துள்ள கேரட் போட்டு, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, நீரானது சுண்டும் வரை கிளறி இறக்கினால், சுவையான கேரட் மஞ்சூரியன் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com