கிராமத்து சுவையில் கருப்பு மூக்கடலை சாதம்!

மூக்கடலை சாதம்...
மூக்கடலை சாதம்...Image credit - youtube.com

-வி. லக்ஷ்மி

ருப்பு மூக்கடலையில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்னைகளையும் தடுக்கிறது. இவ்வளவு சத்துள்ள மூக்கடலையில் சாதம் செய்யலாம் வாங்க...

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி- 1 கப்

கருப்பு சுண்டல்- 2 கப்

குடை மிளகாய்- 2 

இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்

சாட் மசாலா -1 டீஸ்பூன்

நெய் -1 டீஸ்பூன் 

பிரியாணி இலை- 1

தேங்காய்ப் பால் -2 கப்

உலர்ந்த வெந்தய இலை ஒரு கைப்பிடி

தக்காளி- 4

பட்டை -1 துண்டு 

கிராம்பு -1 

வெங்காயம் -3

உப்பு தேவைக்கேற்ப

எண்ணெய் தேவையான அளவு 

வதக்கி அரைக்க:

சீரகம் - 1 டீஸ்பூன்

பூண்டு பல் - 8 

காய்ந்த மிளகாய் - 6

சின்ன வெங்காயம் - 8

செய்முறை:

முதல் நாள் இரவே கருப்பு மூக்கடலையை ஊறவைத்துக் கொள்ளவும். 10 மணி நேரம் ஊறவைத்து அடுத்த நாள் வேகவைக்கும் பொழுது உப்பு போட்டு வேகவைத்து எடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிரியாணி இலை, குடைமிளகாய், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

அரிசியைத் தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து, நீரை வடிக்கவும். பிறகு ஈரம் போகும்வரை நெய்யில் அரிசியை வறுக்கவும். வறுத்த அரிசியில் தேங்காய்ப் பால் விட்டு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன்

வேகவைத்த கருப்பு மூக்கடலை வதக்கிய குடமிளகாய் மசாலா,  சாட் மசாலா சேர்த்து லேசாகக் கொதித்ததும், குக்கரை மூடவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சில நிமிடம் கழித்து திறந்து சுடச் சுட பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com