விடுமுறை காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏதேனும் வித்தியாசமாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதே சமயம் வீட்டு பட்ஜெட் பார்த்து செலவு அதிகம் பிடிக்காத சமையல் வகைகள் எது என்று சிந்தித்து செயல் படுவார்கள் சிலர். அவர்களுக்காகவே இந்த எளிய சத்தான ருசியான ரெசிபிகள்.
1. ரவை பணியாரம்
தேவை:
ரவை -1 கப்
சக்கரை- 1/2 கப்
ஏலக்காய் தூள் - சிறிது
சமையல் சோடா -ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல்- 2 ஸ்பூன்
எண்ணெய் -பொறிக்கத் தேவையான அளவு
செய்முறை:
வெள்ளை ரவையை வறுக்காமல் அதனுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள் ,சோடா உப்பு போட்டு தேவையான அளவு நீர் விட்டு இட்லி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும். சிறிது நேரம் ஊறியதும் ஒரு கடாயில் பொறிக்கத் தேவையான எண்ணெயை ஊற்றி சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவை குழி கரண்டியில் அரை அளவு எடுத்து எண்ணெயில் விட்டு பொது பொதுவென்று மேலே திரும்பி வரும் போது இரு புறமும் திருப்பிவிட்டு நன்கு சிவந்ததும் எடுக்கலாம். மிதமான தீயில் வேக வேண்டும். இந்த ரவா பணியாரம் ஏலக்காய் மணத்துடன் ஸ்வீட் ஆகவும் இருக்கும்.
2. கரம் மசாலா சாட் சுண்டல்
தேவை:
பச்சைப் பட்டாணி
வேர்க்கடலை
மூக்கு சுண்டல்
கொள்ளு
வெங்காயம்
தக்காளி
உப்பு
கரம் மசாலா
சாட் மசாலா
தக்காளி சாஸ்
கொத்தமல்லித்தழை
8 மணிநேரம் நன்கு ஊற வைத்த தானிய வகைகளுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மசாலாப் பொடிகள், தேவையான உப்பு போட்டுக் குலுக்கி மேலே தக்காளி சாஸ் கொத்துமல்லி தூவி கிண்ணங்களில் தந்து பாருங்கள். உடல் நலனுக்கு தேவையான அத்தனை சத்துக்களுடன் சுவையிலும் அசத்தும்.
3. ஸ்வீட் பனானா
வாழைப்பழம் 2
வெல்லம் 50 கிராம்
நெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிது
பேரிச்சை -8
செய்முறை:
ஓரளவு கனிந்த வாழைப்பழங்களை உரித்து தடிமனான ஒரு இன்ச் அளவு வட்டத் துண்டுகளாக நறுக்கவும். வெல்லத்துடன் (நாட்டுச் சர்க்கரையும் பயன்படுத்தலாம்) சிறிது நீர் சேர்த்து கொதித்தும் இறக்கி தூசி போக வடிகட்டவும். நெய்யை சூடாக்கி நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை போட்டு உடையாத வாறு பிரட்டி பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம், ஏலக்காய் தூள் சேர்த்து வெல்லப்பாகு விட்டுக் கலந்து பரிமாறலாம். இதைக் கப்பில் போட்டுக் கொடுத்தால் குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் பழத்தின் சத்துடன் வெல்லச் சத்தும் உள்ளே செல்லும்.
4. ரவா லட்டு
தேவை:
ரவை- 200 கிராம்
பொடித்த சர்க்கரை - சிறு கப்
ஏலக்காய் தூள் -சிறிது
லவங்கம் - தேவைக்கு
முந்திரி திராட்சை - தேவைக்கு
பால் - சிறு கப்
செய்முறை:
ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்த ரவையுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து இலவங்கம், ஏலக்காய்த் தூள், நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கலந்து சிறிது சிறிதாக சூடான பால் பிசிறி உடனே உருண்டைகளாக பிடித்து வைக்கவும். இந்த ரவா லாடு குழந்தைகள் விரும்பும் ஒரு சூப்பர் டிஷ். செய்வதும் எளிது.
5. வெள்ளையப்பம்
தேவை:
மைதா மாவு -ஒரு கப்
புளிப்பான தயிர் அல்லது புளித்த தோசை மாவு ஒரு - கப்
மிளகு சீரகம் - தலா அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - சிறிதளவு
சோடா உப்பு - சிட்டிகை
எண்ணெய் -தேவையான அளவு
பச்சை மிளகாய்- 4
கறிவேப்பிலை- சிறிது
செய்முறை:
மைதா மாவுடன் உப்பு, பொடித்த மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தோசை மாவு அல்லது கடைந்த தயிர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக கரைத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து மாவை எடுத்து சிறுசிறு போண்டாக்களாக சூடான எண்ணெயில் போட்டு நன்கு உப்பி சிவக்க வந்ததும் எடுக்கவும் இதில் மிளகு சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு நல்லது.