வெஜிடபிள் பிரியாணி:
உருளை கிழங்கு, காரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர் முதலிய காய்கறிகள் தேவை. பீன்ஸ்/பட்டாணி போடலாம். கண்டிப்பாக பீட்ரூட் போட வேண்டும். காய்கறிகளுடன் ஒரு தக்காளிப் பழத்தையும் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காய்கறிகளை சுமாரான பெரிய ‘க்யூப்ஸ்’ ஆக நறுக்க வேண்டும். காலிஃப்ளவர், குண்டு பூக்களாக இருக்க வேண்டும். 2 கப் அரிசிக்குக் குறைந்தது 3 கப் காய்கறிகள் வேண்டும். காரத்திற்கு சிவப்பு மிளகாயத்தூள் சேர்க்க வேண்டும். வெங்காயத்தை மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கி வதக்க வேண்டும்.
உப்பு, காரப்பொடி, மஞ்சள் பொடி, காய்கறிகள், அரிசி, தேவையான எண்ணெய், நெய்யில் 2 நிமிடம் வதக்கி, ஒன்றுக்கு இரண்டு என்று தண்ணீர் ஊற்றி குக்கரில் நேரடியாக வைத்து விடலாம். (3 விசில் போதும்) கரம் மசாலா பொடியையும் வதக்கும்போது சேர்த்து விடலாம். பீன்ஸ் மட்டும் 1 இஞ்ச் நீளம் இருக்கும்படி நறுக்க வேண்டும். பச்சை மிளகாய் தேவையில்லை.
பிரியாணி தயாரானதும் ஓரிருமுறை ஒன்று சேரக் கிளறி, வறுத்த முந்திரி, நறுக்கிய மல்லித்தழை தூவவும். ப்ரெட்டை சிறு சதுரங்களாக வெட்டி, முன்பே எண்ணெயில் பொரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிரியாணியுடன் பொரித்த துண்டங்களை பரிமாறும் முன் கலந்துவிடவும்.
வெஜிடபிள் பிரியாணி சிவப்பு – ப்ரவுன் கலரில் இருக்கும். இதில் காய்கறிகள் நிறைய இருப்பதால் தொட்டுக் கொள்ள வெங்காயப் பச்சடியும், உருளைக் கிழங்கு சிப்ஸ்ஸும் சரியான காம்பினேஷன்.
வெஜிடபிள் புலாவ்
இதற்கும் எல்லாக் காய்கறிகளையும் போடலாம். காய்கறிகளை பொடியாக நறுக்க வேண்டும். தக்காளி – பீட்ரூட் புலாவிற்குக் கூடாது கலர் மாறிவிடும். அரிசியை தண்ணீரில் வேக வைக்கக் கூடாது. தேங்காய்ப் பாலில் வேக வைக்க வேண்டும். தேங்காய்ப் பால் திக்காக இருந்தால் சற்று நீர்த்து வைத்துக் கொள்ளலாம். பால் எடுக்க முடியாவிட்டால், வழக்கமாக புலாவிற்கு அரைக்கும் சிறிது மல்லி, புதினா, தேவையான பச்சை மிளகாய், வெங்காயத்துடன் தேங்காய் துருவலையும் அரைத்து, நீரில் கரைத்து அரிசியுடன் வேக வைக்கவும்.
இதற்கு மிளகாய்த் தூள் கிடையாது. மஞ்சள் தூள் சிட்டிகை போதும். காரத்திற்கு பச்சை மிளகாய்தான். 2 கப் அரிசிக்கு 1 கப் காய்கறிகள் போதும். இதற்கு பட்டை, சோம்பு தேவையில்லை. ஏலக்காய், கிராம்பு போதும். பூண்டு வாசனை பிடித்தவர்கள் அதைத் தேங்காயுடன் அரைத்துக் கொள்ளலாம்.
வறுத்த முந்திரி, மல்லித் தழையால் அலங்கரிக்கலாம். பொரித்த ப்ரெட் துண்டங்கள் இதற்குக் கிடையாது. இளம் பச்சை வண்ணத்தில் சாதம் இருக்கும். புலாவிற்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. அப்பளம், வடகம் (அ) உ.கிழங்கு, பட்டாணி குருமா.