

கோதுமைப் பொங்கல்
செய்ய தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை சன்னமானது- ஒரு கப்
சர்க்கரை- ஒரு கப்
பாதாம், உப்பில்லாத பிஸ்தா தலா- 10
குங்குமப்பூ- 4 இதழ்கள்
ஏலத்தூள் -சிட்டிகை
நெய்- கால் டம்ளர்
செய்முறை:
அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு பாதாம் பிஸ்தாவை வறுத்து தனியே வைக்கவும். அதே வானலியில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கோதுமை ரவையை வறுத்து, இரண்டரை கப் நீர் விட்டு வேகவிடவும். சர்க்கரையை சேர்த்துக் கிளறி, வறுத்த பருப்புகள் ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
காரா பிரசாதம்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -ஒரு கப்
வெல்லத்துருவல்-ஒரு கப்
ஜாதிக்காய் தூள்- ஒரு சிட்டிகை
நெய் -ஒரு டேபிள்ஸ்பூன்
ஒடித்து வறுத்த முந்திரி- ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கடாயில் நெய் விட்டு சூடானதும் கோதுமை மாவை சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒன்னரை கப் தண்ணீர் விட்டு நன்கு கொதி வந்ததும் கோதுமை மாவைப் போட்டுக் கிளறி, நெய் விட்டு ஜாதிக்காய்த் தூள், வறுத்த முந்திரி சேர்த்துக்கிளறி இறக்கவும். நட்ஸ் ப்ளேக்ஸ் சேர்த்து கிளறி இறக்கினாலும் சுவை அபாரமாக இருக்கும். பாதாமை ஊறவைத்து, தோல் நீக்கி சீவி சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.
லாப்ஸி
செய்ய தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை- ஒரு கப்
சர்க்கரை- ஒரு கப்
நெய் -கால் கப்
ஏலத்தூள்- ஒரு சிட்டிகை
முந்திரி பருப்பு- 1/4 கப்
காய்ந்த திராட்சை -ஒரு டேபிள் ஸ்பூன்
டரை ஃப்ரூட்ஸ் -கால் கப்
செய்முறை:
கடாயில் நெய் விட்டு கோதுமை ரவையை சிவக்க வறுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்த உடன் சர்க்கரை, ஏலத்தூள், நெய் விட்டு கிளறவும் .நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து வறுத்து அதை கரகரப்பாக பொடித்து, அதனுடன் வறுத்தத் திராட்சையைச் சேர்த்து கிளறி இறக்கவும்.
சீக்கிரமாக ஏதாவது ஸ்வீட் செய்ய நேர்ந்தால் இதுபோல் செய்து அசத்தலாம். ட்ரை ஃப்ரூட்ஸ், பாதாம், முந்திரி இல்லை என்றாலும் வெள்ளரி விதை இருந்தால் போதும். அதை தூவிப் பரிமாறி ஜமாக்கலாம்.
மேலும் இதில் சிறிதளவு கருப்பு ஏலக்காய், மிளகை வறுத்துப் பொடித்து சேர்த்து கிளறி சாப்பிட குளிர் காலத்தில் ஏற்படும் சளி பிடிக்காது. இது அவரவர் சாய்ஸ்.