சீடை வெடிக்குமா?

சீடை வெடிக்குமா?

ம் தவறுதலான கைப்பக்குவம் சீடையை வெடிக்க வைக்குமே தவிர, சீடை தானாக வெடிக்காது.

கீழ்க்கண்ட தவறான கைப்பக்குவம் சீடை வெடிக்கக் காரணம்:

1. சீடைக்குத்தானே என்று அரிசி மாவைக் கொர, கொரவென்று அரைத்துச் சலிக்காமல் விடுவதால், அரிசியில் உள்ள கல்மணல் போல் அரைபட்டிருக்கும். ஒவ்வொரு மணலுக்கும் ஒரு வெடி வீதம் சீடை வெடிக்குமே!

2. உளுத்தமாவையும் நல்ல மாவு சல்லடையில் சலிக்காமல் இருந்தால், அதிலும் கல், மண் துளிகள் இருக்க வாய்ப்புண்டு.

3. மிக முக்கியமாக, பல சகோதரிகள் அவசரத்தினால் எள்ளை அப்படியே அள்ளிப் போட்டு விடுகிறார்கள். எள்ளில் நிறைய கல், மண் இருக்கும். ஆகவே, சீடை 'படார், படார்' என்று வெடிக்கும்.

4. கடலைப் பருப்பில் ஒன்றிரண்டு கல் இருக்கும். அதுவும் வெடிக்க ஏதுவாகும். ஒரு சீடை வெடித்தாலே பயமும் வந்துவிடும். பாதி எண்ணெய் சுவரிலும் தெறித்துச் சிதறும்.

5. இவையெல்லாம் தாண்டினால் தேங்காய்த் துருவும்போது நம்மையறியாமல் ஒரு சிறு 'சில்லு' துருவிய தேங்காயில் இருந்தால் போதுமே, சீடை வெடிக்க!

கீழ்க்கண்ட முறையில் சீடை செய்தால் அருமையாய் இருக்கும்:

ரிசியைக் கல், நெல் பொறுக்கி, பின் நீரில் கழுவி, அரை மணி நேரம் ஊறப் போட்டு, லேசாகத் துணியில் உலறப் போட்டு, ஈர மாவு அரைக்கும் மிஷினில் அரைத்து, சலித்து, வாணலியில் சிவக்க வறுத்து எடுக்கவும்.

உளுத்தம் பருப்பைச் சிவக்க வறுத்து மிக்ஸியில் அரைத்து நைஸ் சல்லடையில் சலித்து. அரிசிமாவு 10, உளுத்த மாவு 1 என்ற விகிதத்தில் சேர்க்கவும். (10 கப் அரிசி மாவு, 1 கப் உளுத்த மாவு.)

எள்ளைச் சுத்தமாகக் கழுவி ஒரு முறைக்கு, இருமுறை கல், மண் நீக்கிப் போடவும்.

கடலைப் பருப்பைக் கல் பொறுக்கி, ஒரு மணி நேரம் ஊறப் போட்டு மாவில் சேர்க்கவும். தேங்காய் தேவை இல்லை.

காரப்பொடி, உப்புப்பொடி, பெருங்காயப் பொடி, துண்டுகளாக நறுக்கிய கறிவேப்பிலை இவற்றைப் போடவும்.

10 கப் (சிறிய கப்) மாவிற்கு 100 கிராம் வெண்ணெய் வீதம் போடவும். மாவை நீர் விட்டுப் பிசையவும். துணியிலோ, வெள்ளை பேப்பரிலோ, சீடையை உருட்டிப் போடாதீர்கள். நீர்ச் சத்து, வெண்ணெய்ச் சத்து இவைகள் பேப்பரிலும் துணியிலும் இறங்கி விடுவதால் ருசி குறையும்.

சிறிய பிளாஸ்டிக் பேப்பரிலோ, சிறிய தட்டிலோ சீடையை உருட்டி எண்ணெயில் போட்டு, அது வேகும் சமயத்தில் அடுத்த ஈடு செய்யச் சீடை உருட்டவும். பொன்னிறமாக வரும்போது, எண்ணெயில் ஓசை அடங்கும்போது சீடையை எடுக்கவும்.

இம்முறையில் செய்யும் சீடை வெண்ணெய்போல் வாயில் போட்டால் கரையும். சாப்பிட்டவர்கள் எப்படிச் செய்தீர்கள் என்று கேட்காமலோ, நன்றாக உள்ளது, மிக நன்றாக உள்ளது என்று உங்களைப் புகழாமலோ நகர மாட்டார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com