விளாம்பழ (Wood Apple) ரெசிபிஸ்!

விளாம்பழ (Wood Apple) ரெசிபிஸ்!

Published on

விளாம்பழம் பித்தம் தொடர்பான தொல்லைகளை தீர்க்கும். அதாவது தலைவலி, வாந்தி வருதல்,  வாய் கசப்பு, பித்தத்தால் தலை சுற்றுவது போன்றவற்றை குணமாக்கும். இதில் விட்டமின் ஏ, பி 2, கால்சியம், இரும்புச்சத்து உள்ளது. அஜீரணத்தை சரி செய்து பசியை தூண்டும் சக்தி கொண்டது. சீதபேதிக்கு இதன் ஓட்டை தட்டி போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து நீரை வடிகட்டி குடிக்க சரியாகும்.

விளாம்பழ பச்சடி:

விளாம்பழம் 1

உப்பு சிறிது 

காரப்பொடி ஒரு ஸ்பூன் 

வெல்லம் அரை கப் 

தாளிக்க :கடுகு ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு 1/2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்

சிவப்பு மிளகாய் 1

விளாம்பழத்தை மேலிருக்கும் ஓடை தட்டி எடுத்துவிட்டு கையால் நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் ஒன்றை கிள்ளி போட்டு நல்லெண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் விளாம்பழத்தை சேர்த்து கிளறி இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இரண்டு நிமிடம் கொதித்து எல்லாம் ஒன்றாக கலந்து கெட்டியாக வரும் போது பொடித்த  வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி விடவும். ருசியான விளாம்பழம் பச்சடி. மாங்காய் பச்சடியை விட இதன் ருசி அலாதியாக இருக்கும்.

விளாம்பழ தொக்கு:

விளாம்பழம் ஒன்று

கடலை பருப்பு  2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் 6

உப்பு தேவையானது

புளி  கோலி அளவு

பெருங்காயப்பொடி சிறிது

வெல்லம் சிறு துண்டு

கறிவேப்பிலை சிறிது

விளாம்பழத்தை தட்டி மேல் இருக்கும் ஓடை எடுத்துவிட்டு உள்ளிருக்கும் சதைப் பகுதியை எடுத்துக் கொள்ளவும். வாணலியில் கடலைப்பருப்பு, மிளகாயை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வறுக்கவும். அத்துடன் எடுத்து வைத்துள்ள விளாம் பழத்தையும் சேர்த்து இரண்டு கிளறு கிளறி உப்பு , புளி, வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பெருங்காயத்தூள் போட்டு கிளறி கெட்டியானதும் இறக்கி ஆறியதும் எடுத்து ஈரம் படாமல் பத்திரப்படுத்த 15 நாட்கள் வரை இந்த தொக்கு கெடாது. தயிர் சாதத்திற்கு, இட்லி, தோசைக்கு, சப்பாத்தி, பூரி என அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள ஏற்ற தொக்கு இது.

விளாம்பழ சாட்:

இதற்கு அடுப்பே தேவையில்லை. ஓட்டிலிருந்து பழத்தை எடுத்து நன்கு கையால் மசித்து சிறிது உப்பு, 2 ஸ்பூன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை, சாட் மசாலா பொடி ஒரு ஸ்பூன், ,காரப்பொடி அரை ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து சுவைக்க வேண்டியது தான். 

விளாம்பழ ஜூஸ்:

விளாம்பழம் ஒன்று 

வெல்லம் 100 கிராம் 

ஏலக்காய் 2 

விளாம்பழத்தை தட்டி ஓட்டை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு வெல்லம் பொடித்தது, ஏலக்காய் 2, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். கொட்டைகள் எல்லாம் நன்கு அரை பட்டவுடன் எடுத்து வடிகட்டி பரிமாற வேண்டியதுதான். ருசியான ,சத்தான விளாம்பழ ஜூஸ் தயார்.

விளாம்பழ வடை:

விளாம்பழம் 5 

உப்பு தேவையானது 

காரப்பொடி  இரண்டு ஸ்பூன் 

சர்க்கரை அரை கப்

இது இலந்தை அடை போல் தான் ருசியாக இருக்கும். உப்பு புளிப்பு காரம் இனிப்பு என எல்லா சுவையும் கலந்து அற்புதமாக இருக்கும்.இதற்கு அடுப்பு தேவையில்லை. ஓட்டிலிருந்து விளாம்பழங்களை எடுத்து உப்பு சிறிது, காரப்பொடி இரண்டு ஸ்பூன், சர்க்கரை அரை கப் சேர்த்து நன்கு கையால் கலந்து பிசைந்து மிக்ஸியில் விதைகள் அரைப்படும் வரை அரைத்து எடுத்துக்கொள்ளவும். வெயிலில் பிளாஸ்டிக் ஷீட் விரித்து சிறு சிறு வடைகளாக தட்டி காய விடவும். அடிக்கிற வெயிலில் ஐந்தாறு நாட்களில் நன்கு காய்ந்து விடும். இந்த வடைகளை பத்திரப்படுத்தி தேவைப்படும்போது எடுத்து அப்படியே சாப்பிடலாம்.

logo
Kalki Online
kalkionline.com