பரிசளிப்பும் பரிதாபங்களும்!

பரிசளிப்பும் பரிதாபங்களும்!

மீபத்தில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்த என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஹாலில், தரையில் அமர்ந்திருந்தவளை சுற்றிலும் பரிசுப் பொருட்களாக நிறைந்திருந்தது. ‘மொத்தம் 13 வால் கிளாக்குகள், தெய்வங்கள், குழந்தைகள், பசுமாடுகள், இயற்கைக் காட்சிகள்  கொண்ட  சுவரில் மாட்டக்கூடிய படங்கள் 11, இரண்டு டின்னர் செட்டுகள், எட்டு ஃபிளவர் வாஷ்கள், நான்கு பீங்கான் டீ கப்புகள் என்று வந்திருக்கின்றன. ஏற்கனவே வீட்டில் இரண்டு வால்கிளாக்குகள் இருக்கிறது. இன்னும் ஒன்றை வேண்டுமானால் சமையலறையில் மாட்டி வைக்கலாம். புது வீடு என்பதால் ஆணி அடித்து படங்களை மாட்ட முடியாது. டீ கப்புகளாலும் பெரிதாக பிரயோஜனம் இல்லை. ஷோகேஸ் முழுக்க ஃபிளவர் வாஸ்களை வைப்பது நன்றாக இருக்காது. பரிசுப் பொருட்களை என்னாலும் உபயோகிக்க முடியாது. பிரியமாக கொடுத்ததை தூக்கி எறியவோ, பிறருக்குக் கொடுக்கவோ மனம் வரவில்லை. லாப்டில் இவற்றை போட்டு வைக்கவேண்டியது தான் என்று வருந்தினார்.

பொதுவாக உறவினர்கள் பணத்தை மொய்யாக வைப்பது வழக்கம். நண்பர்கள், தெரிந்தவர்கள் தான் மேற்கூறிய பொருட்களை பரிசாகத் தருவர். யாருக்குமே உபயோகமில்லாமல் இது போன்ற பரிசுகளைத் தருவதைக் காட்டிலும் அவர்களும் தங்களால் முடிந்ததை பணமாகவே அளித்துவிடலாம். நாம் பரிசாக பிறருக்குத் தரும் பொருட்கள் பயனற்று சும்மா கிடப்பதில் கொடுப்பவர், பெறுபவர் இரு தரப்பினருக்கும் நஷ்டம் தானே?

தற்போது திருமண வீடுகளிலும் ரிடர்ன் கிப்ட் என்ற பெயரில் சிலர் மரக்கன்றுகள், பக்திப் பாடல்கள், ஸ்லோகங்கள், வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கிய புத்தகங்களை  பரிசளிக்கின்றனர். அதை வாங்கிச் செல்வோரில் எத்தனை பேர் உபயோகிப்பர் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அப்பார்ட்மெண்ட்களில் வசிப்பவர்களால் மரம் வளர்க்க முடியாது. தனி வீடுகளில் குடியிருப்போருக்கு, மரம் செடி கொடிகள் வளர்ப்பில் ஆர்வம் இருந்து இடமும் இருந்தால் தான் மரக்கன்றுகள் தந்ததற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். அதேபோல, வாட்ஸ் அப்பில் வரும் நீளமான செய்திகளையே படிக்கத் தயங்கும் பலர் புத்தகங்களை பிரித்து படிக்கப் போகிறார்களா என்ன? அவை பழைய பேப்பர் குப்பைகளுடன் தான் சேரும்.

முன்பெல்லாம் தேங்காய்,வெற்றிலைப் பாக்கு அடங்கிய தாம்பூலப் பை தருவார்கள். நவராத்திரி போன்ற பண்டிகை சமயங்களில் தரப்படும் ரவிக்கைத் துண்டுகளை பெரும்பாலும் யாரும் தைத்துப் போட்டுக் கொள்வதில்லை. தமக்கு வந்தவற்றை பிறருக்கு ரொட்டேஷனில் தருவது பல பெண்களின் வழக்கம்.

அதே போல வீட்டிற்கு புதிதாக வருபவர்களுக்கு சிலர் வேஷ்டி, புடவை தட்டில் வைத்து தருவர். வேஷ்டி, சேலை அணியும் வழக்கமில்லாத இளையோருக்கு இதனால் பயனில்லை. பொதுவாக பெண்களுக்கு தாங்களே அலைந்து திரிந்து சேலை வாங்கி அணிவது தான் பிடிக்கும். பிறர் பரிசாகத் தரும் புடவை டிசைன் பிடிக்காமல் போகலாம். அவற்றை அணியாமல் பீரோவில் சும்மா வைத்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு பணமாகவே’ தந்து விட்டால் உபயோகமாக இருக்கும். முடியாதவர்கள் மஞ்சள், குங்குமம், பூ  வைத்துத் தந்தால் போதுமே?

மத்திய வர்க்கக் குடும்பங்களில் இறப்பு போன்ற துக்க காரியங்களில்  இறந்தவரின் மகன், மகள் குடும்பத்தினருக்கு நெருங்கிய மற்றும் தூரத்து உறவுகள் சேலை, வேஷ்டி, பிள்ளைகளுக்கு உடைகள் என சீராகத் தருவது வழக்கம். அது போன்ற சமயங்களில் நிறைய ஆடைகள் சேர்ந்து, அவற்றில் பல சம்மந்தப்பட்டவரின் மனத்திற்குப் பிடிக்காமல் யாருக்கேனும் தானமாக அளித்து விடுவர். தற்போது அந்தப் பழக்கம் மாறி, ஆடைகளுக்குப் பதிலாக  பணமாகவே உறவினர்கள் தந்து விடுவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com