தாகம் தீர்ப்பதோடு புண்ணியமும் சேர்க்கும் பாணாக்காரம்!

தாகம் தீர்ப்பதோடு புண்ணியமும் சேர்க்கும் பாணாக்காரம்!

திடீரென்று இன்றைக்கு பாணாக்காரத்தின் நினைவு வந்து விட்டது. ஆஹா! அதன் ருசியே அலாதியானது. கொளுத்தும் கொடும் வெயியில் தான் எங்கள் கிராமத்தில் ஜக்கம்மா, காளியம்மா, முத்தாலம்மா திருவிழாக்கள் நடத்தப்படும். இந்த்த் திருவிழாக்களின் ஹைலைட்டே அங்கு விநியோகிக்கப்படும் பாணாக்காரம் தான். பாணாக்காரத்துக்கு சைட் டிஷ்ஷாக வெல்லமும், தேங்காய் சீவலும் கலந்த பச்சரிசியும் தருவார்கள். கோயிலில் சாமிகும்பிட வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக ஆளுக்கொரு கைப்பிடி பச்சரிசி, தேங்காய் வெல்லக் கலவை, கூடவே ஒரு தம்ளர் பாணாக்காரம். போதுமே! வயிறு குளு குளுவென நிறைந்து விடும். பிறகு வெயிலென்ன? புழுதியென்ன? சாமி கும்பிட்டு விட்டு பக்தர்களில் பெரியவர்கள் என்றால் ஆற்றங்கரை மரத்தடிகளில் அமர்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடுவார்கள். இல்லாவிட்டால் கொத்தாலிக்கா என்று சொல்லப்படக் கூடிய சொட்டாங்கல் விளையாடுவார்கள். சிறுவர், சிறுமிகள் என்றால் ஆற்றோர ஆலமர விழுதுகளிலும், புளியமரத்திண்டுகளிலும் நன்றாக ஆடி விட்டு வர வேண்டியது தான் பாக்கி!

ஒவ்வொரு ஆண்டும் திருவிழாக்கள் இப்படித்தான் கழிந்து கொண்டிருந்தன அப்போதெல்லாம். இப்போது ஆற்றோரத்தில் ஆலமரமும் காணோம், புளியமரத்தையும் காணோம். ஆனால், பாணாக்காரம் மட்டும் இப்போதும் கூட மக்கள் மனங்களில் மட்டுமல்ல கைகளிலும் மிச்சமாகிப் போயிருக்கிறது. அதுவரை ஆறுதலாயிருக்கிறது.

சரி இப்போது இந்த பாணாக்காரம் எப்படிச் செய்வது என்று தெரிந்து கொள்வோமா?

எதற்காகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒருவேளை வீட்டில் பழங்கள் வாங்கி வைக்க மறந்த நேரத்தில் நமக்கு திடீரென்று ஜில்லென்று தொண்டையை நனைக்க வேண்டும் போலிருந்தால் வீட்டு மளிகைச் சாமான் லிஸ்டில் ஒன்றாக இருக்கும் இந்த புளியை சட்டென்று ஒரு 10 நிமிடம் ஊற வைத்து அதில் வெல்லத்தை நுணுக்கிப் போட்டு சுக்கும், ஏலமும் கலந்து ஒரு திடீர் பழரசம் தயாரித்து விடலாமே. இதை தேவைப்பட்டால் 10 நிமிடம் ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்தும் அருந்தலாம். அதற்காகத்தான். குழந்தைகளைப் பொருத்தவரை ஒரு புதிய சுவையை அறிமுகப்படுத்தலாம். கோகோ கோலாவும், பெப்ஸியும் குடித்து வறண்டு போன தொண்டைக்கு இந்த பானம் நிச்சயமாக இதமாகவே இருக்கக் கூடும்.

ஒரே ஒரு ரகசியம் சொல்லவா! இதை புளியில் செய்தோம் என்பதை மட்டும் வீட்டில் யாரிடமும் முதலில் சொல்லி விடவே கூடாது. புளி என்றால் அட, அதைப் போய் யார் குடிப்பது? என்று உடனேயே மறுத்து விட நினைப்பார்கள்.அதனால் அருந்தி ருசி கண்ட பிறகு சொல்லிப் பாருங்கள். பிறகு அவர்களாகவே அடிக்கடி கேட்டு வாங்கி அருந்த ஆரம்பிப்பார்கள். இது என்னுடைய அனுபவம். நீங்களும் இதையே பின்பற்றலாமே!

தேவையான பொருட்கள்:

புளி -100 கிராம்

வெல்லம் - 250 கிராம்

சுக்குத்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு- சிறிதளவு

ஏலப்பொடி - 2 சிட்டிகை

செய்முறை:

200 கிராம் புளியை ஒருமுறை நன்கு கழுவி குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்கவும். இளகிய புளி என்றால் 10 நிமிடம் ஊறினாலும் போதும். கொஞ்சம் கட்டியானது என்றால் 1/2 மணி ஊற வையுங்கள். பிறகு எடுத்து 1/2 லிட்டர் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். கரைத்த புளியை தேவைப்பட்டால் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு 1/4 கிலோ வெல்லத்தைப் பொடித்து நீரில் கரைத்து வடிகட்டி புளிக்கரைசலோடு சேர்க்கவும். இதில் மேற்கூறியவாறு 1 டீஸ்பூன் சுக்குத்தூள், 2 சிட்டிகை ஏலப்பொடி உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது அருமையான பாணாக்காரம் அருந்தத் தயார் நிலையில் உள்ளது.

நான் சொன்ன அளவுகளில் கரைத்தால் உங்கள் குடும்பம் மட்டுமல்ல மேலும் அக்கம்பக்கத்தினருக்கும் பரிமாறப் போதுமானதாகவே இருக்கும். இப்போது வெயில் தொடங்கி விட்டதில்லையா? அண்டை வீட்டுக்காரர்களோடு உறவைப் பேணி கூடவே அவர்கள் நலம் நாடும் புண்ணியத்தையும் வளர்த்துக் கொள்ள இதையும் தான் ஒரு வாய்ப்பாக்கிக் கொள்வோமே! சரி தானே?!

இந்த பானம் நம் உடலில் நீர்சத்தைக் காக்கிறது. அத்துடன் 100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து முழுமையும் கிடைக்கிறது. அதேபோல், ஜீரணக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல், உடலின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவைகளை புளி சீராக்குகிறது. மேலும், உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com