அதலைக் காயா? அப்படின்னா என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
அதலைக்காய் என்பது தெற்குச் சீமையில் மழைக்காலங்களில் கிடைக்கக்கூடிய கொடியில் படர்ந்து வளரக்கூடிய ஒருவகைக் காய்.
சென்னையில் விசாரித்துப் பாருங்களேன். பெரும்பாலானோருக்கு இப்படி ஒரு காய் இருப்பதே தெரியவில்லை. சிலர் இதைக் கண்டிருந்தாலும் கூட, இதென்ன வித்யாசமாக இருக்கிறதே, இதை வாங்கிக் கொண்டு போய் என்ன செய்வார்கள்? என்ற ரீதியில் தான் இதைப் பார்க்கிறார்கள்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு அம்மணி, பீர்க்கங்காயைக் காட்டி என்னிடம், இதென்னதுங்க, இதெல்லாம் வாங்கிட்டுப் போறீங்களே, என்னன்னு சமைப்பீங்க இதை? என்று கூட கேட்டிருக்கிறார்.
இப்படியான அதிசயப் பிறவிகள் நிறைந்த ஊர் இது!
பீர்க்கங்காயே தெரியாதவர்களுக்கு அதலைக் காய் பற்றியெல்லாம் என்ன தெரிந்திருக்க முடியும்?
அதன் அருமை தெரியாதவர்களுக்கு அது ஒரு வெறும் காய். ஆனால் அருமை தெரிந்தவர்களுக்கோ அது தேவாமிர்தம் போன்றது.
அதிலும் துவரம் பருப்பைக் கடைந்து அதில் நெய்யூற்றிப் பிசைந்து உருண்டை செய்து நடுவில் சிறு வெங்காயமிட்டுப் பொரித்த அதலைக்காயை புதைத்து வைத்து சாப்பிட்டுப் பாருங்கள். சிறு வெங்காயத்தின் மெல்லிய இனிப்பும், அதலைக்காயின் மென் கசப்பும், நெய் கலந்த பருப்பின் அலாதி சுவையும் நாவைக் கொண்டா கொண்டா என்கும்.
அப்படிப்பட்ட அதலைக்காயைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் தானே!
அதலைக் கொடிகள் பெரும்பாலும் தானாக வளரக் கூடியவை. இவற்றை முறையாகப் பயிரிட்டு வளர்க்காவிட்டாலும் மற்ற பயிர்கள் விளையும் வயல்களின் வரப்புகளில் இவற்றை விதை ஊன்றி வளரச் செய்யலாம், வரப்புகளில் தப்பு விதைகளிலும் கூட இவை வளரும். இக்கொடிகள் பொதுவாக ஐப்பசியில் பூத்து, கார்த்திகை, மார்கழியில் காய்த்து, தை மாதத்துக்கு முன் அறுவடை செய்யப்படுகின்றன.
பல ஆண்டுகள் வாழும் தன்மை கொண்ட அதலைச் செடிகள் ஒவ்வோர் ஆண்டும் வறட்சிக்காலத்தில் காய்ந்து விழுந்துவிட்டாலும் மண்ணுக்கடியிலிருக்கும் இதன் கிழங்கு உயிருடன் இருக்கும் என்கிறார்கள் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள்.
அதலைக்காய்க்கு பாகற்காயுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு உண்டு. இதன் வேறு அறிவியற் பெயர்கள்: Luffa tuberosa, Momordica tuberosa ஆகியன. அதலைக்காய் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, மகாராட்டிரத்திலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் கூட விளைகிறது.இவை, பாகற்காய்களைப் போலவே கசப்பான சுவை கொண்டவை. அத்துடன் இவற்றுக்கு உடல்நலனுக்கு உதவக்கூடிய பல மருத்துவத் திறன்களும் உண்டு. குறிப்பாக நீரிழிவு, குடற்புழு போன்ற பிரச்சினைகளுக்கு அதலைக்காய்கள் மருந்தாகப் பயன்படுகின்றன.
அது மட்டுமல்ல அதலைக் காயில் நமது உடல் நலனுக்குத் தேவையான நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து என அத்தனை சத்துக்களும் உண்டு.
இன்றும் கூட தமிழகத்தின் தென்னகக் கிராமங்களில் மட்டுமே இது அதிகமும் சமையலில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. 1972 ஆம் ஆண்டு வாக்கில் பார்வதி, குமார் எனும் இரண்டு தோட்டக்கலை வல்லுநர்கள் இந்தக் காயின் மகத்துவம் பற்றியும் இதை எப்படி சமைத்து உண்பது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துச் சொன்ன பிறகு தற்போது இதன் நற்பலன்களை சிலர் அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.