சர்க்கரை நோய் உள்ளவர்களைத் தாக்கக்கூடிய புற்றுநோய்!
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அனைத்து தரப்பு மக்களையும் பயத்திற்குள்ளாக்கும் ஒரு வியாதி தான் சர்க்கரை நோய். அது நம்முடைய உடல் நலத்தை முற்றிலும் பாதித்து உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இதன் காரணமாகவே நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள். ஏனெனில் இது ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி பக்கவாதம், இதய நோய், மற்றும் புற்றுநோயைக் கூட ஏற்படுத்தலாம். மேலும் நீண்ட காலமாக நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு கணையப் புற்றுநோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
ஆய்வுகள் சொல்வது என்ன?
ஒருவருக்கு நீரிழிவு நோயின் பாதிப்பு 5 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இருந்தால், அவர்களுக்கு கணைய புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள், சராசரிக்கும் அதிகமாகவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் 50 வயதுக்கு மேல், முதன்முறையாக ஒருவர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இந்த கணைய புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் மட்டுமே உள்ளதாம்.
கணையப் புற்று நோய் எதனால் வருகிறது?
நமது உடலில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியான முறையில் வைத்திருக்க உதவும் ஹார்மோன் தான் இன்சுலின். அது நம்முடைய கணையத்தில்தான் உற்பத்தி ஆகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஹார்மோனின் தேவை அதிகம் இருப்பதால், கணையத்தின் வேலை இங்கே அதிகமாகிறது. இதன் காரணமாக, கணையத்தில் கட்டிகள் ஏற்பட்டு அது பின் நாட்களில் புற்று நோயாகவும் மாற வாய்ப்புள்ளதாம்.
எனவே நீரிழிவு நோயை யாரும் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். திடீரென்று ஒருவருக்கு நீரிழிவு நோய்க்கான அறிகுறி தென்பட்டால், அது கணைய பாதிப்பின் ஆரம்பமாகக் கூட இருக்கலாம். இதன் அறிகுறிகள் பாதிக்கப்பட்டவருக்கு மெதுவாகவே தெரிவதால், எதற்கும் நீரிழிவு நோயாளிகள் கணைய பாதிப்பு பரிசோதனையும் செய்து கொள்வது நல்லது. இவை இரண்டும் தொடக்க நிலையிலேயே மருத்துவர்களால் அறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டால், பெரும்பாலும் குணப்படுத்தி விடலாம்.
இதைப் பற்றி சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களும், மருத்துவமனைக்கு சென்றால், ஏதாவது சொல்லி நம்மை பயமுறுத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, வீட்டிலேயே இயற்கை மருத்துவத்தை முயற்சி செய்கிறார்கள்.
தற்போது அனைத்து விதமான நோய்களையும் துல்லியமாகக் கண்டறியும் மருத்துவ முறை நம்மிடம் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் நிச்சயம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, சாப்பிடும் உணவு மற்றும் வாழ்க்கை முறையை கவனமாகக் கையாண்டால், எதையும் எதிர்த்து வென்று விடலாம்.